'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பிறப்பும், இறப்பும் இயற்கையின் சூத்திரம். இடைப்பட்ட காலம்தான் வாழ்க்கை. பிறந்து 96 வயது வரை வாழ்ந்து மரணம் எய்துகிறார் என்றால், அந்த 96 ஆண்டு காலம் அவருடைய வாழ்க்கை காலகட்டம். இதில் பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இந்த வாழ்க்கைக் கட்டமான 96 வயதில் அவர் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்கிறார் என்பது தான் முக்கியம். இதை நம் முன்னோர்கள் இரண்டு விதமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்; அன்னம் ஆகாரம் உயிருக்கு உறுதுணையாகும் என்று குறிக்கிறார்கள் சான்றோர்கள். நவதானியங்களில் தலைசிறந்தது நெல். மனித குலத்திற்கு உண்டான உணவில் நம்பர் 1 நெல். மனித குலம் ஒன்று; நவதானியம் ஒன்று; நெல் ஒன்று. நாம் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்கிறோம் என்றால் அந்த இயற்கை சூழ்நிலை, அந்த மண் அதில் இருந்து வரக்கூடிய உணவுதான் நமது உடலுக்கு உறுதுணையாக நிற்கும்.
ஒரு உணவு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு முறைகள் உள்ளது. உணவின் முறைகள், உணவின் விவரங்கள் ஆகியவற்றை நாம் படிப்பதே இல்லை. இதை எந்த பள்ளிக் கூடத்திலும் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஆரோக்கியத்தை விட்டுவிட்டால் ஒன்றுமே இல்லை. சமைத்த உணவை ஒரு நாழிகைக்குள் உண்டு முடிக்க வேண்டும். அதேபோல், சமைத்த உணவைச் சூடாக சாப்பிட வேண்டும். ஆயக்கலைகள் 64 உள்ளது. இதில் ஏழு கலைகள் உயரிய கலைகள் ஆகும். இசை, நடனம், வர்மம், மருத்துவம், ஜோதிடம், தவம், அந்தம் ஆகியவை அடங்கும்.
செய்யும் செயலும், மனதும் ஒருமித்திருக்க வேண்டும் என்பதே ஆசனம். நாம் அப்படியாகவா கடைபிடிக்கிறோம். சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறோம். சாப்பிடும்போது டிவி பார்க்கிறோம். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று கூட பார்க்காமல், சாப்பிட்டால் அது எப்படி நமது உடலில் ஒட்டும். நம்முடைய தியானம் உணவில் இருக்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.