‘உன் நண்பனைக் காட்டு. நீ எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்கிறேன்’ என்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் பூவோடு சேர்ந்த நாரைப் போன்று இருக்க வேண்டும். பன்றியோடு சேர்ந்த கன்று போல இருக்கக்கூடாது.அன்பைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகச் சிறந்த பண்பு. நல்ல நட்பு என்றால் இவ்வாறு பகிர்ந்து கொள்வதில் மட்டுமே இருக்கிறது. மனம்விட்டுப் பேசுவதால் உங்களுக்கு ஆபத்து வந்து விடாத நட்பாக இருத்தல் மிக முக்கியம்.‘அனைவரும் நல்லவர்களே’ என்று நினைப்பதில் பரந்த மனப்பான்மையும் இருக்கிறது. அப்பாவித்தனமும் இருக்கிறது. எனவே நண்பர்களைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மணம் தரும் விதமான நட்பை அமைத்துக் கொள்வது அவசியம்.
வயல் வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அற்புதமான மணம் ஒன்று மூக்கைத் துளைத்தது. வாசனை பிரமாதமாக இருக்கவே அது எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தார். பக்கத்தில் காட்டுச் செடிகள் நிறைய முளைத்திருந்தன. அவற்றில் பூத்திருந்த மலர்களை எல்லாம் முகர்ந்து பார்த்தார். அந்த மனதை மயக்கும் கதம்ப வாசனையைப் போல அவை இல்லை. யோசனையுடன் சிறிது தூரம் நடந்தபோது சற்று தொலைவில் ஒரு களிமண் உருண்டை ஒன்றைப் பார்த்தார். அதனைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்தபோது அந்த மணம் வீசியது. ஆக தன் நாசிக்குள் நுழைந்து பாடாய்ப்படுத்திய அந்த சுகந்த மணம் இந்தக் களிமண் உருண்டையில் இருந்துதான் வருகிறது என்பதே அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ‘‘களிமண்ணே, உனக்கு எப்படி இவ்வளவு இனிய மணம் கிடைத்தது?’’ என்று கேட்டார். ‘‘நான் ஒரு பூந்தோட்டத்தில் இருந்தேன். அங்கு சுகமான மணம் தரும் நிறைய பூச்செடிகள் என் மீது வளர்ந்தன. சில நாட்கள் கழித்து அப்புறப்படுத்தும்போது என்னைத் தூக்கி எறிந்து விட்டார்கள். நான் இங்கே வந்து விழுந்தேன். ஆனாலும் அச்செடிகளின் இனிய மணம் மட்டும் இன்றும் என்னைவிட்டுப் போகாமலேயே இருக்கிறது’’ என்றது களிமண் உருண்டை. சேர்க்கை நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்.
இப்போது மகாபாரதத்தில் ஒரு காட்சியை நாம் சுருக்கமாகப் பார்க்கலாம். கிருஷ்ண பரமாத்மா தருமரை அழைத்து, ‘‘நகரில் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா’’ என்றார். அதேபோல துரியோதனனை அழைத்து, ‘‘நகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா’’ என்றார்.தருமரும் நகரத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்தார். சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து கெட்டவன் யாராவது இருக்கிறானா என்று தேடினார். அவர் பார்த்தவர்கள் அனைவருமே நல்லவர்களாகவே அவருக்குத் தெரிந்தனர். கெட்டவன் ஒருவனைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் கவலையுடன் திரும்பி வந்தார் தருமர். அதேபோல துரியோதனனும் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தார். அவர் கண்ணுக்கு அனைவருமே கெட்டவர்களாகத் தான் தெரிந்தார்கள். ஒரு நல்லவனைக்கூடக் காணோம். ஏமாற்றத் துடன் அரண்மனைக்குத் திரும்பினார். இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வந்ததைப் பார்த்தார் கிருஷ்ண பரமாத்மா. மெல்ல புன்னகைத்தார். எதற்காக இப்படியரு பரீட்சையை பரமாத்மா நடத்தினார்? நல்லவனாக இருப்பவன் கண்களுக்குப் பார்க்கிற அனைவருமே நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள்.கெட்டவனாக இருந்தால் அவன் கண்களுக்குப் பார்க்கிற அனைவருமே கெட்டவர்களாகத்தான் தெரிகிறார்கள்.