உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவர் பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு கரோனா தொடர்பாகச் சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற எந்த நோய்க்கும் இல்லாத வகையில் இந்த கரோனா வைரஸ்க்கு மட்டும் பரவும் தன்மை மற்ற வைரஸ்களை விட மிக வேகமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை உபயோகித்தாலும், அவர்களுடன் நெருங்கிப் பழகினாலும் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றது. அதே போல் சிலருக்கு இந்த நோய்த் தொற்று இருந்தாலும் எந்தப் பாதிப்பும் இல்லாத நல்ல முறையில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
அவர்கள் மூலம் கண்ணுக்கே தெரியாமல் இந்த நோய்க் கிருமி அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதே போன்று சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலே நாம் கரோனா வந்துவிட்டதாக நினைக்க கூடாது. அந்தமாதிரி பாதிப்புக்கள் ஏற்பட்ட உடன் தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நோயின் தாக்கம் உடனடியாகத் தெரியாதததால் இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. இந்த லாக் டவுன் என்பது சம்மர் விடுமுறை அல்ல. மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றார்.