செந்தமிழ்க்கு சேதுப்பிள்ளை என சுத்தானந்த பாரதியாரால் பாராட்டப்பட்டவர் சேதுப்பிள்ளை.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்கிற கிராமத்தில் வசித்த பிறவிப்பெருமாள் – சொர்ணம் தம்பதியின் மகனாக 1896 மார்ச் 2ந்தேதி பிறந்தார். செப்பறைத் திருமடத்தலைவர் அருணாச்சல தேசிகரிடம் நீதி நூல்கள், இலக்கிய நூல்கங்கள், சங்க இலக்கியம், புராணங்கள், சைவத்தமிழ்சுவடிகளை வாசிக்க கற்று தேர்ந்தார். பாளையங்கோட்டை தூய சேவியர் பள்ளியில் முறையான தொடக்ககல்வியை பயில தொடங்கினார். திருநெல்வேலி இந்து கல்லூரியிலும், பின்னர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் இளங்களை பட்டபடிப்பையும் படித்து தேர்ச்சி பெற்றார். தமிழறிஞர்கள் சுப்பிரமணியம், சிவராமன் இருவரும் சேதுப்பிள்ளை படித்த பள்ளி, கல்லூரியில் தமிழ் ஆசிரியர்களாக இருந்து தமிழ் கற்று தந்து அதன்மீது காதலை உருவாக்கினார்கள்.
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை மாணவராக படித்து தேர்வாகி அதே பச்சையப்பா கல்லூரியில் தமிழ்த்துறை வரிவுரையாளராக பணியாற்றினார். பணியாற்றிக்கொண்டே சென்னை சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞராக தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்தார். ஊருக்கு திரும்பியவருக்கு நெல்லையப்பர் என்பவருக்கு குடும்பத்தார் திருமணம் செய்து வைத்தனர். நெல்லையை சேர்ந்த ஆழ்வார்ஜானகி வாழ்க்கை துணைவியாக கைப்பிடித்தார்.
1923ல் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். பொதுமக்கள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால் உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராகவும், பின்னர் நகரமன்ற துணை தலைவராகவும் பதவிக்கு வந்தார். ஆனால், அதைவிட தமிழ் மீது அவருக்கு இருந்த பற்றால் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.
1936ல் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியில் அமர்த்தியது. 1961 வரை தமிழ்த்துறை பேராசிரியர், துறைத்தலைவர் பதவிகளை வகித்து தமிழ் இலக்கண, இலக்கியத்தை மாணவ செல்வங்களுக்கு புகட்டினார். 25 ஆண்டுகள் பணியாற்றியபோது இவரது பணி நாட்களை பாராட்டி வெள்ளிவிழா கொண்டாடியது பல்கலைக்கழகம்.
சென்னை வானொலி நிலையம், புதுவை வானொலி நிலையம், திருச்சி வானொலி நிலையங்கள் வழியாக இலக்கண, இலக்கிய உரை நிகழ்த்துவார் சேதுப்பிள்ளை. பிற்காலத்தில் அது நூலாக வெளிவந்தது. உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் எழுதியுள்ளார். திருவள்ளுவர் நூல் நயம் என்கிற கட்டுரையே இவர் எழுதிய முதல் நூலாகும். அதன்பின் சிலப்பதிகார நூல்நயம், வழிவழி வள்ளுவர், பாரதியார் இன்கவித்திரட்டு போன்ற இவரது பல நூல்கள் வெளிவந்தன.
தமிழின்பம் என்கிற நூலுக்கு இந்தியரசு சாகித்திய அகதாமி விருது வழங்கி கவுரவித்தது. தமிழர்வீரம், தமிழ்விருந்து, தமிழின்பம், மேடைப்பேச்சு போன்ற இவரது பல நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழ்இன்பம் என்கிற நூல் மலேசியா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்த்துறை மாணவர்களுக்கு பாட நூலாக வைத்திருந்தது.
அவரது உரை நடைகளில் அடுக்கு தொடர் வார்த்தைகளும், எதுகை, மோனையும் நிரைந்திருக்கும். பேச்சும் அப்படியே. இவரது இலக்கிய உரையை கேட்ட தருமபுர ஆதினம் அதில் மனதை பறிக்கொடுத்து அவரது சொல் வளத்தில் மயங்கி சொல்லின்செல்வர் என்கிற பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இவர் பணியாற்றிய சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டமும், இலக்கிய பேரறிஞர் என்கிற பட்டத்தை வழங்கி கவுரவித்தது. 1961 ஏப்ரல் 25ந்தேதி தனது 65வது வயதில் மறைந்தார் சேதுப்பிள்ளை.