நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் இலக்கியவாதியுமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு இந்த ஆண்டுக்கான கவிஞர் திருநாள் விருதை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளான ஜூலை 13 ஆம் தேதி, பிரபல கவிஞர் ஒருவருக்கு ‘கவிஞர் திருநாள் விருதை’ தன் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இப்போது இந்த வருட விருதை, நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்குவதாக வைரமுத்து அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘ஜூலை 13 என் பிறந்தநாளை முன்வைத்து ஒவ்வோராண்டும் வழங்கப்படும் 'கவிஞர்கள் திருநாள்' விருதினை இவ்வாண்டு பெறுகிறார் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன். கவிஞர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர்க்கு விருது வழங்குவதில் வெற்றித் தமிழர் பேரவை களிப்புறுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் கற்பனைச் சுவடுகள், உயிர் திருடும் உனக்கு, சூரியனைப் பாடுகிறேன், சிறகுகளாகும் சிலுவைகள், நீ ஒரு பகல், காற்றின் புழுக்கம், காலநதி, ஒரு கோப்பை மெளனம், நள்ளிரவு வெயில், வலியின் புனைபெயர் நீ, உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களை நடத்தியிருக்கிறார். பாவேந்தர் பட்டயம், அண்ணா விருது, பெரியார் விருது, கவிக்கோ நினைவு விருது என பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர் இவர்.
தமிழ்நாடன், திரைப்படப் பாடல்களையும் எழுதி வருகிறார். கவிப்புயல், கவிமாமணி, கவியருவி உள்ளிட்ட சிறப்புப் பட்டங்களையும் இவர் பெற்றிருக்கிறார். உலக முத்தமிழ்ப் பேரவையின் ஆலோசகராகவும், திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையில் தலைவராகவும் இவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.