அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் விளக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் விளக்கு இலக்கிய அமைப்பின் 25வது ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சுகிர்தராணிக்கும், ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.
சுகிர்தராணி
கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம் இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். வேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர், சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கிவருபவர். ‘இரவு மிருகம்’, ‘தீண்டப்படாத முத்தம்’, ‘இப்படிக்கு ஏவாள்’ உள்ளிட்ட ஆறு கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தன் நினைவு விருது, இந்திய குடியரசு கட்சி தமிழ்நாடு மாநிலக் குழுவின் அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள முன்னூர் மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர் பணிபுரிகிறார். மிகப் புதிய ஆய்வுமுறைகள் மூலம் மாற்று வரலாற்றையும் மாற்றுப் பண்பாட்டையும் தலித்துகளுக்காக பெரும் ஆதாரங்களுடன் நிறுவியவர். பல ஆழமான ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லும் இத்தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான ஸ்டாலின் ராஜாங்கம், ‘தீண்டப்படாத நூல்கள் :ஒளிபடா உலகம்’, ‘சாதியம்: கைகூடாத நீதி’, ‘அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்’, ‘தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான ஸ்பேரோ இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து இயங்கிவரும் இரு விருதாளர்களையும் நக்கீரன் வாழ்த்துகிறது.