சொற்களை அறிவது என்னும் நெடும்பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அகராதியின் துணையை நாடுவது, பேச்சுத்தமிழை ஊன்றிக் கேட்பது, வட்டார வழக்கில் வழங்கப்படும் தனித்தன்மையுள்ள சொற்களை இனங்காண்பது, சொல்வேட்கையோடு இலக்கியங்களைப் படிப்பது, செய்யுள்களைப் பொருளுரை பொழிப்புரை விளக்கவுரையோடு கற்பது என எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.
பேச்சுத் தமிழை ஊன்றிக் கேட்டல் என்னும் முறைமையில் நம்முடைய முயற்சியே இராது. பேசிக்கொண்டிருப்பவரின் மொழிகளுக்குச் செவிகொடுத்தால் போதும். அவருடைய சொற்களை நாம் தொடர்ந்தறிந்தபடியே இருக்கலாம். அதைக் குறித்து நான் பிறகு விளக்குகிறேன்.
அகராதியின் துணையை நாடுவது என்பதை முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அகராதியின் வழியாகவே சொற்களை எப்படி அறிந்து நினைவிற்கொள்வது? முன்பே சொன்னதுதான், அகராதியைக் கதைநூல் படிப்பதைப்போல் தொடர்ந்து படித்துச் செல்வது இயலாது. அவ்வப்போது நமக்கு வேண்டிய சொல்லின் பொருளை அறிவதற்காகவே அகராதியைப் படிக்க வேண்டியிருக்கிறது.
எப்போதாவது நமக்குத் தேவைப்படுகின்ற சொல்லின் பொருளை அறிவதன் வழியாகவே நமக்கு வேண்டிய சொல்லறிவை மிகுதியாகப் பெற்றுவிட முடியாது. அந்நிலையில்தான் ஒரு சொல்லைக் குறித்து அறியத் தொடங்கும்போது அச்சொல்லின் முதல் அசையைத் தொடக்கமாகக்கொண்ட அனைத்துச் சொற்களையும் ஒருசேர அறிந்து வைப்பது என்னும் வழிமுறையைச் சொன்னேன்.
மனம் என்ற சொல்லின் பொருளை அறியத் தொடங்குகையில் “மனம் என்பதை முன்னொட்டாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சொற்களின் பொருள்களையும் அப்போதே அறிந்துகொள்வது” என்னும் தொகுப்பு முறை.
மனக்கசப்பு, மனக்கசிவு, மனக்கடினம், மனக்கண், மனக்கலக்கம், மனக்கவலை, மனக்கவற்சி, மனக்களிப்பு, மனக்கனிவு, மனக்காய்ச்சல், மனக்கிடக்கை, மனக்கிலேசம், மனக்குருடு, மனக்குழப்பம் என்று தொடங்கும் அச்சொற்களின் அணிவரிசை இறுதியாக மனனம் என்ற சொல்லில் முடிகிறது.
மனம் என்கின்ற ஒரு சொல் வழியாக நெஞ்சம் என்பதைக் குறிக்கும் ஒரு பொருளோடு தொடங்கியது நம் சொற்றேடல். அதற்குப் பின்னொட்டுகள் அமைந்து பொருள் கூட்டியபோது பற்பல பொருள்களைப் பெற்றுவிட்டோம். இவ்வாறு அறிவதன் வழியாக பின்னொட்டுச் சொற்களின் தனிப்பொருளையும் நாம் அறிந்தவர்களையும் அறிந்தவர்களாகிறோம்.
கசப்பு, கசிவு, கடினம், கண், கலக்கம், கவலை, கவற்சி, களிப்பு, கனிவு என்று கைந்நிறைந்த சொற்களை அறிந்துவிட்டோம். அவற்றில் பல சொற்களின் பொருள் நமக்கு முன்பே தெரியும் என்றாலும் இப்போது துலக்கமாகத் தெரிந்துகொண்டோம். கவலை என்பதற்கும் கவற்சி என்பதற்கும் வருத்தம் என்கின்ற ஒரே பொருள்தான். கவல் என்பதிலிருந்து கவலை (கவல்+ஐ) தோன்றுகிறது, கவற்சி (கவல்+சி) தோன்றுகிறது.
மனக்கிடக்கை என்பதிலுள்ள கிடக்கை என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. மனக்கிடக்கைக்கு உள்ளக்கருத்து என்ற பொருளைப் பெற்றோம். கிடக்கை என்பது கிடத்தல் என்னும் பொருளில் வழங்கப்படும் தொழிற்பெயர். மனத்தில் நெடுநாளாய்க் கிடந்தது மனக்கிடக்கை. இப்போது கிடக்கையின் பொருள் தெரிந்துவிட்டது. ஒரு சொல்லின் வழியாக ஒன்பது சொற்களை அறிந்துகொள்ளும் எளிய வழி இஃது.
உங்களுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் என்றால் இவ்வாறு அறிகையில் பெரும்பாலும் பழக்கப்பட்ட சொற்களாகவே இருக்கும். ஆனால், இடையிடையே உங்கள் மொழியறிவைக் கூர்மைப்படுத்தும் அருஞ்சொற்களும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மொழியைப் பொறுத்தவரையில் எல்லாச் சொற்களுக்கும் பொருளறிந்தவர்கள் என்று எவருமே இல்லை. புலவர் பெருமக்களேகூட எங்கேனும் ஓரிடத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாமல் அகராதியை நாடி வருவார்கள். அன்றேல் ஒரு சொல்லுக்கு அவர் அறிந்த பொருளுக்கும் மேலான வேற்றுப்பொருள் இருக்கிறதா என்பதையும் தெளிவு பெறத் துணிவார்கள். அதனால் ஒரு சொல்லின் பொருள் வழங்கீட்டுக்கு முடிவே இல்லை என்று கூறலாம். சொற்களோடும் அவற்றின் பொருள்களோடும் தொடர்ந்து குடித்தனம் நடத்தியே ஆகவேண்டும்.
முந்தைய பகுதி:
உழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா?.. -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #10
அடுத்த பகுதி: