Skip to main content

“நான் ஏன் கவிதையைக் கைவிட்டேன்?” - எழுத்தாளர் சோ.தருமன் நேர்காணல்

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
writer cho dharman interview

 

சோ.தருமன்-

 

தனது அப்பட்டமான அதிரடி எழுத்துகளால் தமிழிலக்கியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். விவசாயம் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த இவர் கரிசல் இலக்கியத்தின் மூலம் தனது தனித் துவமான படைப்புகளால் எழுந்து நிற்கிறார். இவரது சிறுகதைகளும், புதினங்களும் அடித்தட்டு மக்களுக்காக, அவர்களையே பேசுகின்றன. சமூகநீதிக்கான குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான வாதடலாக இவரது எழுத்துகள் இயங்கிவருவது பெருமைக்குரியது. பல்வேறு விருதுகளால் சிறப்பிக்கப்பட்ட தருமனின் ’சூல்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோரின் திருப்புதல்வராக தூத்துக்குடி மாவட்டம் உருளைகுடி எனும் சிற்றூரில் 1953 ஆகஸ்ட் 8-ல் பிறந்த தருமன், இலக்கோடும் பொறுப் புணர்வோடும் எழுதிவருகிறார். அதனால் அவர் எழுத்துக்களில் மனிதம் நிரம்பிவழிகிறது. அவரை நம் இனிய உதயத்துக்காக சந்தித்தபோது...

 

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீங்கள், எப்படி இலக்கிய விவசாயியாக மாறினீர்கள்?

 

நல்ல கேள்வி. நான் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமமே விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். நான் இப்போதும் ஒரு விவசாயிதான். எங்கள் குடும்பத்தின் வேர் என்றால் அது விவசாயம் தான். எங்களுடைய பாட்டன், தாத்தா, அப்பா, நான் என எல்லோருக்குமே ஆதாரமாக இருந்ததும், இருப்பதும், அதுதான். எனக்கும் 10 ஏக்கர் கரிசல் காடு உள்ளது. அந்ததக் காலத்தில் கிராமங்களில் எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்காது. அப்போது நாட்டுப்புறக் கூத்துக்கள் மட்டும்தான் இருந்துச்சு. நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்களில் ஏதேனும் கூத்து என்று கேள்விப்பட்டால், எங்கள் கிராம மக்கள் அதைப் பார்க்கக் கிளம்பிப் போய் விடுவார்கள். கூத்து பார்த்து விட்டு நடுச்சாமத்தில்தான் எங்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள். இதில் எங்க அய்யாவும் ஒரு நாட்டுப்புற கலைஞர் என்பதால், அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்கு என் 13 வயசு வரை கிடைச்சிது. .

 

அதுக்குப் பிறகு எனக்கு மனசில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புறதுக்குதான் நான் வாசிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்தைக் கட் அடிச்சிட்டு நான் லைப்ரரிக்குப் போய்டுவேன். இப்படித்தான் வாசிக்கும் பழக்கம் வந்துது. என் தாய்மாமாவான எழுத்தாளர் பூமணியின் வீட்டுக்கு அதிகமா போவேன்.

 

அங்கு நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் பார்காத, தெரிந்திடாத புத்தகங்களெல்லாம் அங்கு இருக்கும். அதை எல்லாம் எடுத்து வந்து வாசிப்பேன். அந்தப் புத்தகங்கள்தான் என்னை செதுக்குச்சு. அந்த தீராத வாசிப்புதான் என்னை எழுத்துத் துறைக்கு கொண்டு வந்துச்சு.

 

எனக்கு கிடைச்ச வாய்ப்புகளை நான் நல்லா பயன்படுத்திக் கிட்டேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயியான நானும், எழுத்து விவசாயி ஆகிவிட்டேன்.

 

உங்கள் தந்தையார் நாட்டுப் புறக் கூத்தில் நடிப்பார் என்று சொன்னீர்களே?

 

ஆமாம். என் தந்தை பிரபலமான கூத்துக் கலைஞர். கும்மிக்கூத்துக் கலைஞரா அவர் இருந்தார். ராமாயணக் கூத்தெல்லாம் அப்ப நிறைய நடக்கும். எங்க அய்யாதான் அதில் ஹீரோ. ராமர் வேசம் கட்டி ஆடுவார். அப்ப ராமர், சீதை, லட்சுமணன், மாரீசன், பரசுராமன் வேசமெல்லாம் கட்டிக்கிட்டு கூத்துக் கலைஞர்கள் எல்லோரும் ஆடிப் பாடி நடிப்பாங்க. அதை எல்லாம் ரசிச்சிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தோடு, இதெல்லாம் முடிஞ்சிப்போயிடுச்சி. அதுல எனக்குப் பெரும் வருத்தம். ஆனாலும் நான் வாசிக்கும் பழக்கத்தால் எழுத்தாளர் ஆயிட்டேன். என் மாமா பூமணி எழுத்தாளராக இருந்ததும், எங்களுக்கு அருகிலேயே கி.ரா இருந்ததும், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். சிறுகதைகள் எழுதுவதற்கு முன் நான் கவிஞனாகவும் இருந்தவன். கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எனது கவிதைகள் வந்துள்ளன.

 

கவிதையை எதற்காகக் கைவிட்டீர்கள்?

 

கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம் என்று தோன்றியதால், . கவிதைகளை விட்டுவிட்டு, சிறுகதைகள் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். உரைநடைக்குள் போனதால் எனக்கு விசாலமான இடம் கிடைத்தது. மதுரையிலிருந்து வெளியான ""மகாநதி"" எனும் பத்திரிகையை கவிஞர் பரிணாமன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த தி.சு. நடராஜன் இருவரும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கவிஞர் பரிணாமன் இருந்தார். என் முதல் சிறுகதை 1980 ஆம் ஆண்டில் நான் எழுதிய சிறுகதையான ’விறுவு’ மகாநதியில் வெளியானது. அதன் பின் நான் கவிதை எழுத விரும்பவில்லை. சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

 

நேர்காணல் : வீரசோழன் க.சோ.திருமாவளவன்

 

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.