பிப்ரவரி 23 – சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் மறைந்த நாள்
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார். குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
தமிழ்செய்தி, ஜெயபேரிகை என்கிற தினசரி செய்தித்தாள்களையும், அலைகள் என்கிற பெயரில் வார இதழையும் நடத்திவந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பத்திரிகை செலவு, கட்சி செலவுகளால் பெரும் நட்டத்துக்கு உள்ளானதால் பிற்காலத்தில் அவைகளை நிறுத்தினார். மேடை பேச்சுகளில் தமிழ் வார்த்தைகள் அருவியாய் கொட்டும். அதன்பொருட்டே அவரை சொல்லின் செல்வர் என அழைத்தனர்.
பெரியார் – மணியம்மை திருமணம் சம்பத் தான் பெரியாரின் வாரிசு என்கிற கருத்தை நொறுக்கிவிட்டது. இயக்கத்தின் பெரும்பான்மை தளபதிகள் பெரியாரின் முடிவால் இயக்கத்தில் இருந்து விலகினர். பெரியாரின் மூத்த தளபதியான அண்ணாவின் பின்னால் பெரியாரின் வாரிசு என நம்பப்பட்ட சம்பத் உட்பட அனைவரும் சென்றனர்.
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பெரியாருக்கு அடுத்த இடத்தில் சம்பத் இருந்தார். படித்தவர், அனுபவசாலி, சிந்தனையாளர், சட்டதிட்டங்கள் வடிவமைப்பதில் வல்லவர், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்கவர். 1957ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகி டெல்லி சென்றார். டெல்லி அவரது கொள்கையை மட்டுமல்ல அவரையே மாற்றியது. திராவிட நாடு கொள்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய சம்பத், படிப்படியாக அதை பேசுவதை தவிர்த்தார். இதனை அறிந்த திமுக தலைவர்கள் திமுகவை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தனர்.
அதோடு, கட்சியில் சம்பத் – கருணாநிதி ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாகின. அந்த குழு மோதலால் கருணாநிதியை நசுக்க எவ்வளவோ முயன்றார் சம்பத், அதில் தோல்விகளை சந்தித்தார். இதனால் திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, தன்னை மதிக்கவில்லை என குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அண்ணாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திமுகவில் இருந்து விலகுவதாக 1961 ஏப்ரல் 9ந்தேதி சம்பத் அறிவித்தார். உடனடியாக தமிழ் தேசிய கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார். அதற்கு பெரியார், பாரதிதாசன் போன்றோர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனிக்கட்சி சரியாக வராது என காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார், தோல்வி தான் கிடைத்தது.
இவரது மனைவி சுலோசனாசம்பத். இவர்களுக்கு 1946ல் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இளங்கோவன், இனியன் என இரண்டு பிள்ளைகள். அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் சுலோசனாசம்பத். அவர்களது மகன்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர், அதிரடி கருத்தாளர், மத்திய இணையமைச்சர் பதவி வகித்தவர். இனியன் சம்பத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளில் இருந்தவர் பின்னர் பழ.நெடுமாறன் கட்சியில் இருந்தார், பின்னர் தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்.
தனது 51வது வயதில் அதாவது 23.2.1977ல் மறைந்தார் ஈ.வி.கே.சம்பத்.