Skip to main content

யார் காலில் விழுந்து வணங்கவேண்டும்?

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை
 

திம்ப சக்கர ஜாதகத்தை உலகுக்கு அருள்வித்த ஸ்ரீ ஸ்கந்த உபாசகர், ஜீவநாடி கலையரசு பி.டி. ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களுக்கு அடியேனுடைய பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டு, அவரது சீரிய ஆசிர்வாதத்துடன் எனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கிறேன்.

ஒருவருடைய திம்ப சக்கர ஜாதகத்தில் குரு எங்கிருக்கின்றதோ அந்த உறுப்பு சிறப்படைகிறது. உதாரணமாக குரு ஒருவருடைய முகத்தில் இருந்தால், அவரது முகத்தில் காலையில் கண் விழிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்தான். "இன்று யார் முகத்தில் விழித்தேனோ, படாத பாடுபட வேண்டியதாகிறது' என்று புலம்ப வேண்டியதில்லை. 2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் நாவில் குரு இருக்கப்பெற்று அருள்வாக்கு வழங்கும் நிலையில் உள்ளவர்கள். அருள்வாக்கு என்பது பேசத்தெரிந்த நாள் முதல் வருவதில்லை. அவர்களுக்கு நடக்கும் குரு தசையில்தான் அறிவுப்பூர்வமான பேச்சு, உபாசனைகள் செய்யக்கூடிய சக்தியைப் பெறுகிறார்கள்.

 

saibaba



குரு 2-ஆம் இடமாகிய முகத்தில் அமையப் பெற்றவர்களின் முகம் தெய்வீகக்களை பெற்றுவிடுகிறது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் இடம் பெற்ற கிரகங்கள் அவருடைய வாழ்நாளில் ஒவ்வொரு நிலையிலும் காய்களை நகர்த்திக்கொண்டே இருக்கின்றன. ஒருநாள் இல்லாவிடில் ஒருநாள் அவர் உன்னதமான மகான் ஸ்தானத்தை அடைந்தே தீருவார்.

இரண்டாமிடமாகிய முகத்தில் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் சிறப்பாகும். குரு, சுக்கிரன், புதன், சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வளரும் பாவங்களுக்கு, அதிலும் நிலையானப் பாவத்துடன் யோகாதிபதியாக வந்து, திம்ப சக்கரத்தில் முகத்தைக் குறிக்கின்ற 2-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஜாதகங்கள் சுகவாழ்வையும் சௌகரியமான செல்வத்தையும் கொடுக்கும். அவ்வாறில்லாமல் நிலையற்ற பாவங்களைத் தொடர்புகொண்டு, யோகத்தைக் கெடுக்கக்கூடிய பாவங்களைத் தன்னகத்தே வைத்து அவயோகிகளாக வருகின்ற சனி, செவ்வாய், ராகு, கேது முகத்தில் அமைகின்ற ஜாதகங்கள் எவ்வளவு வருமானம் வந்தாலும் பற்றாக்குறை வாழ்வினை அனுபவிக்கப் பிறந்தவர்களே.

பொதுவாக, யாருடைய கால்களில் விழுந்து வணங்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. கண்டவர்களின் காலிலில் விழுந்து வணங்குவது கூடாது. திம்ப சக்கர ஜாதகத்தில் பாதம் என்ற உறுப்பில் பாவகிரகங்கள் இருந்து, அத்தகையவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதால் பலன் ஒன்றும் கிடைக்காது. அதற்கு மாறாக அவருடைய பாவ கர்மாக்கள் விழுபவரிடம் வந்து சேர்ந்து கொள்ளும். பாதத்தில் சுபகிரகங்கள் இருக்கப்பெற்றவர்களில் காலிலில் விழுந்து வணங்குவது மிகவும் நன்மை பயக்கும். பாதத்தில் குரு இருக்கப் பெற்றவர்கள் அல்லது சந்திரன் நின்ற ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு அமர்ந்த ஜாதகர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினால், அவர்கள் செய்த பூர்வபுண்ணியப்பலன்கள் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்று, முற்பிறவியில் செய்த பாவங்கள் தொலையும் சக்தியும் உண்டாகும். ஆதிசங்கரரின் பாதத்தில் குரு இருப்பதால் அவரின் காலில் விழுந்து வணங்கியவர்கள் மிக உன்னத நிலையை அடைந்தார்கள். இன்றளவும் அவரது பாதத்திற்கு பூஜை செய்து வழிபடுபவர்கள் ஏராளம். அவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கண்கூடான உண்மை.

நெற்றியில் குரு இருப்பவர்கள் இறைவனின் செய்திகளை நேரடியாகப் பெற்று மக்களுக்கு போதிக்கும் வலிலிமையையுடையவர்கள். பலருக்கும் குருவாக இருக்கும் தகுதியுடையவர்கள். புத்தம்புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள் இவர்களே நீதிமான்கள், அறிவியல் விஞ்ஞானிகளாக வலம்வருவார்கள். மற்ற சுபகிரகங்களாகிய சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் நெற்றி ஸ்தானத்தில் இருக்கப்பெற்றவர்களுக்கும் அந்தந்த கிரகங்களின் குணங்களுக்கேற்ப சிந்தனை பலம் அமைந்து அதற்குத் தக்கவாறு சாதனைகளைச் செய்ய வைக்கும். இவர்கள் எங்கு சென்றாலும் பெரிய அளவில் குருமார்களாகவோ, ராஜதந்திரிகளாகவோ உருவாவதால், அவர்களுக்கே உண்டான வெகுமதிகளும் மரியாதைகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

திம்ப சக்கர ஜாதகத்தில் சந்திரனுக்கு 2-ல் குரு இருப்பவர்களின் முகம் தெய்வீக முகமாகும். அவர்களது முகத்தில் விழித்தாலே தெய்வீக மாற்றம் உண்டாகும். இதற்கு சிறந்த உதாரணம் திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆவார். அவரது திம்ப சக்கர ஜாதகத்தில் 2-ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால், அவரது தரிசனத்திற்காக ஏங்கியவர்கள் ஏராளம். அவரது புகைப்படம் எங்குள்ளதோ அங்கு சுபிட்சத்திற்குப் பஞ்சமில்லை எனலாம். அவரது திம்ப சக்கர ஜாதகத்தை தரிசிப்போம் அன்பர்களே.