ஒருவர் மிகத் திறமைசாலியாக இருந்தாலும், சில காரியங்களில் அவரது எண்ணம் ஈடேறாமல் போய்விடும்.
இவ்வாறு நடப்பதற்கு முதல் காரணம் ஜாதகத்திலிருக்கும் லக்னாதிபதியும் கோட்சார கிரகங் களும். 4-க்கு அதிபதி நீசம் அல்லது அஸ்தமனமாக இருந்தால், மனதில் நினைக்கும் காரியங்கள் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது.
ஒருவர் வாழ்வில் புகழுடன் இருப்பார். அவருக்கு பெரிய அளவில் செல்வாக்கு வரும் நேரத்தில் ஜாதகத்தில் அஸ்தமனமான கிரகத்தின் அந்தரம் அல்லது நீச கிரகத்தின் அந்தரம் நடந்தால் செயல்களில் தடை ஏற்படும்.
ஒருவருக்கு தசா காலங்கள் நன்றாக இருந்து, ஜாதகத்தில் அந்த தசாநாதன் வலுவாக இருந்தாலும், கோட்சாரத்தில் அவருக்கு சனி 4, 8, 12-ல் இருந்தால், சனியின் பாதிப்பால் அவர் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். சுப தசை வேலை செய்யாமல், கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் போய்விடும்.
ஒருவருக்கு கோட்சாரத்தில் குரு 3, 6, 8, 10, 12-ல் வரும்போது, அவருக்குக் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் நின்றுவிடும். ஒருவரின் ஜாதகத்தில் பல கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், அவர்களுக்கு அந்தந்த பாக்கியாதிபதியின் நேரம் வரவில்லையென்றால் திறமை வெளியுலகிற் குத் தெரியாமல் பெட்டிக்குள் மூடப் பட்டவரைப்போல இருப்பார். யோக கிரகத்தின் தசை நடக்கும் நேரத்தில் கோட்சார கிரகம் சரியாக இருந்தால் மட்டுமே பெயர் வெளியுலகத்திற்குத் தெரியவரும். வெற்றியைக் காண்பார்கள்.
ஒரு பெரிய எழுத்தாளரின் ஜாதகத்தில் சனி, ராகு அல்லது சனி, சூரியன், ராகு அல்லது செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி, ராகு 4, 9, 10-ல் இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் மூன்றாவது பாகம் வரை கடுமையாக கஷ்டப்பட வேண்டியதிருக்கும். பலருக்கு நன்மைகள் நடக்கும்போது தடைகள் உண்டாகும். ஆனால், 60 வயதிற்குப் பிறகு யோக தசை நடக்கும்போது, கோட்சார கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது செயல்களில் வெற்றி கிடைக்கும்.
நீதிபதி, வழக்கறிஞர், ஜோதிடர் ஆகியோரின் ஜாதகத்தில் புதனோ குருவோ அஸ்தமனமாக இருந்தால், அவர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், தடைகள் பல உண்டாகும். ஆனால், 45 வயதிற்குப் பிறகு தசாநாதன் நல்ல முறையில் இருந்தால், அப்போது யோகாதிபதியின் அந்தரம் நடந்தால் வெற்றி காண்பார்கள்.
எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும், ஒருவருக்கு செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகிக் கொண்டேயிருப்பதற்கு முக்கியமான காரணம்- ஜாதகத்திலிருக்கும் லக்னாதிபதி. இரண்டாவது காரணம்- பாக்கிய ஸ்தானாதிபதியான கிரகம். மூன்றாவது- தசை. நான்காவது- கோட்சார கிரகங்கள். இவையனைத்தும் சரியாக இல்லையென்றால், எவ்வளவு பெரிய மனிதருக்கும் காரியங்களில் தடை உண்டாகும்.
பரிகாரங்கள்
பகைவர்களால் தடை ஏற்பட்டால், கடுகு எண்ணெயால் ஆஞ்சனேயருக்கு விளக்கேற்ற வேண்டும். தினமும் காலையில் பூமா தேவியைத் தொட்டு வணங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வீட்டில் நீக்கிவிட வேண்டும். வீட்டில் கரு நீலம், கடும் பச்சை, கடும் ப்ரவுன் வண்ணங்களை பூசக் கூடாது. படுக்கும் கட்டிலுக்குக் கீழே செருப்பு, தோல், இரும்புப் பொருட்கள் ஆகியவற்றை வைக்கக்கூடாது. தன் இஷ்ட தெய்வத்தை வருடத்திற்கொருமுறையாவது சென்று வழிபடவேண்டும்.
அமாவாசை, பௌர்ணமி, கிரகண நேரத்தில் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம். வீட்டில் ஸ்ரீயந்திரத்தை வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். இதனால் காரியங்களில் தடைகள் உண் டாகாமல், வெற்றி கிடைக்கும். புகழ் கிடைக்கும்.
மகேஷ் வர்மா