கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியன்று சிவபெருமான் பைரவராக உருவெடுத்தார் என்கிறது சிவபுராணம். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் பைரவர் திருவுருவமும் ஒன்றென ஆகமங்கள் கூறுகின்றன. படைக்கும் கடவுளான பிரம்மதேவன், ஆணவம் கொண்டதால் அவரின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் பைரவர் ரூபம்கொண்டு கிள்ளியெடுத்த நாளே பைரவர் உதயமான நாள் என்று புராணம் கூறுகிறது. அது காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது.
பைரவர் சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் எழுந்தருளியிருப்பார். சில தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருவார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. மேலும், தனிக்கோவில்களும் உள்ளன. அந்தவகையில் காரைக்குடிக்கு அருகேயுள்ள வைரவன்பட்டி திருத்தலமும் ஒன்று. இத்தலத்தின் பழங்காலப் பெயர் வீரபாண்டியபுரம். இங்கு எழுந்தருளியிருக்கும் பைரவரை வயிரவன், பைரவன் என்றெல்லாம் அழைப்பர்.
இத்தலத்திற்கு வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன் மூதூர், வயிரவநகர், வயிரவமாபுரம் என்று பல பெயர்கள் உள்ளன. இக்கோவிலின் தனிச்சந்நிதியில் அருள்புரியும் பைரவர்தான் மார்த்தாண்ட பைரவர். கிழக்கு நோக்கிய இக்கோவிலின் மூலவர் வளரொளிநாதர். அம்பாள் வடிவுடையம்மை. ஈசன் பத்ம பீடத்தின் மீது லிங்கத் திருமேனியாக அருள்புரிகிறார். முதல் பிராகாரத்தில் வளரொளிநாதர், வடிவுடையம்மை, விநாயகர், முருகன் சந்நிதிகளோடு பரிவார தெய்வங்கள், நவகிரகங்களும் அருள்புரிகிறார்கள். இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் தனிச்சந்நிதியில் தென்திசையில் அருள்புரியும் பைரவர், ருத்ராம்சமாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
இவரது மேற்கரங்கள் உடுக்கையையும், நாகத்தையும் பிடித்திருக்கின்றன. கீழ்த்திருக்கரங்கள் நீண்ட திரிசூலத்தையும், கபாலத்தையும் ஏந்தியுள்ளன. தனியழகும், கம்பீரக் கோலமும், அன்பும், ஞானமும், கருணையும் பொங்கும் திருமுகத்தோடு, திகம்பரராக நாய் வாகனத்தோடு காட்சியளிக்கிறார். இந்த சிவாலயத்தில் பைரவருக்கே முக்கியத்துவம். இக்கோவிலை வயிரவன் கோவில் என்றும் அழைப்பர்.
இந்த பைரவரை வழிபட வந்த தேவர்கள், "நீராட இங்கு கங்கை இல்லையே... என்று வருந்தியபோது, அவர்களது குறையைத் தீர்க்க வயிரவரே தன் சூலத்தினால் தரையில் குத்த, கங்கை நீர் பீறிட்டு ஊற்றாக வெளிப்பட்டது. அதுவே தற்போது ‘வயிரவத்தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இதில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நீராடினால் மக்கட்பேறும்; கார்த்திகை மாத ஞாயிறு, திங்கட்கிழமையில் நீராடினால் பாவ விமோசனமும்; மார்கழி மாதத் திருவாதிரையில் நீராடினால் செல்வச் செழிப்பும் ஏற்படுமென்பது ஐதீகம்.
ததீசி முனிவர், தேவகுருவான வியாழன், சந்திரன் போன்றோர் இந்தத் தீர்த்தத்தில் நீராடியுள்ளனர். தேவகுருவை மதிக்காத இந்திரனின் பொலிவு குறைந்தது. தன் அகந்தையை உணர்ந்த இந்திரன் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, வளரொளிநாதரை வணங்கி பாவ விமோசனம் பெற்றான். மகாபலி − சக்கரவர்த்தி வாமனருக்கு தானம் தர விரும்பியபோது, சுக்கிராச்சாரியார் அதனைத் தடுக்க முயற்சித்து ஒரு கண் பார்வையை இழந்தார். பல திருத்தலங்கள் சென்ற சுக்கிரன் இந்த பைரவர் கோவிலுள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு கண்ணொளி பெற்றார் என்கிறது புராணம். இந்தத் தலத்தின் தலமரம் ஏறழிஞ்சில் ஆகும். இந்த மரத்தின் காய்கள் கீழே விழுந்ததும், தாமே ஊர்ந்து சென்று மரத்தில் ஒட்டிக்கொள்ளும் சிறப்புடையவை. அக்காலத்தில் இந்த மரங்கள் காடுபோல் பரவியிருந்தால் அங்கோலவனம் என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் முதல் பிரகாரத்தில் வடகிழக்குக் கூரையில் பைரவர் கோவிலின் தலபுராணச் செய்திகளையும், தென்கிழக்குக் கூரையில் ராமாயண நிகழ்ச்சிகளையும் ஓவியங்களாகக் காணலாம். தெற்குப் பகுதியிலுள்ள ஓவியங்களில் தட்சிணாமூர்த்தி, பிரம்மன், அண்ணாமலையார் ஆகியோரின் திருவுருங்களைக் காணலாம். இக்கோவில் பெரிதும் சிறிதுமான இரண்டு தட்சிணாமூர்த்தி திருவுருவங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று ஞான தட்சிணாமூர்த்தி. இவர் முதல் பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் ஆலமரம், சனகாதி முனிவர்களின்றி தனித்துள்ளார். ஐந்து இசைத்தூண்கள் தாங்கும் எழில்மண்டபத்தில் இவர் அருள்புரிகிறார். மற்றொன்று பெரிய திருவுருவமாக தெற்கு தேவகோஷ்ட மாடத்தின் முன்புறம் கல்மண்டபத்தில் அமைந்துள்ளது. வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலம் இது. வலது திருவடி தாழ்ந்து முயலகனின் முதுகை மிதித்தபடி உள்ளது. இடக்காலை மடித்து வலது தொடைமேல் வைத்திருக்கிறார். இவரது முன்புறம் சனகாதி முனிவர்கள் நால்வர் பத்மாசனத்தில் அக்கமாலையும் சுவடியும் ஏந்தி தத்துவம் கற்கும் நிலையில் அமர்ந்துள்ளார்கள்.
அர்த்தமண்டப கோஷ்ட மாடங்களில் தென்திசையில் நர்த்தன விநாயகர், வடதிசையில் விஷ்ணு துர்க்கை, துவார கணபதி, ஆகாச பைரவர், ஆதிமூலம், அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடன மூர்த்தி, தண்டாயுதபாணி, குழலூதும் கோபாலன், கரிக்குருவிக்கு உபதேசிக்கும் சிவஸ், ராமர், வீர ஆஞ்சனேயர், ஞானசம்பந்தர், ரிஷப வாகனர், துவார பாலகர்கள், துவார பாலகிகள் என்று ஏராளமான சிற்பங்களைக் காணலாம். இத்திருக்கோவில் கருவறையின் வடதிசையில் சண்டேஸ்வரர் தனியே தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பானது. பாறையைக் குடைந்து அதில் சண்டேஸ்வரரை எழுந்தருளச் செய்துள்ளனர். அருகிலுள்ள சுற்றுச்சுவரில் விஸ்வரூப அனுமனின் சிற்பமும், அனுமனின் முன்பு கைகூப்பி நிற்கும் ராமபிரானின் அரிய சிற்பமும் உள்ளன. இதுபற்றி ஒரு வரலாறு உண்டு.
முதன்முதலில் ராம பிரானைச் சந்திக்கிறார் அனுமன். அப்பொழுது, அனுமனைப் பார்த்த ராமன், ‘குரங்கு முகம், மனித உடல் கொண்டுள்ள இவன் எப்படி நமக்கு உதவுவான்' என்று நினைத்தாராம். அதை உணர்ந்த அனுமன் உடனே விஸ்வரூபம் எடுத்து தான் சிவாம்சம் பொருந்தியவன் என்பதைக் காட்டினாராம். அந்த விஸ்வரூபத்தைத் தான் ராமபிரான் வணங்கினார் என்று சொல்லப்படுகிறது.
இக்கோவில் முதன்முதலில் கிருத யுகத்தில் தேவேந்திரனால் கட்டப்பெற்றது என்று புராணம் கூறுகிறது. பிறகு சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன் நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாட்டில் குடியேறியபொழுது பாண்டிய மன்னனால் கி.பி. 718-ல் நகரத்தார்களுக்கு வழங்கப்பெற்ற ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று. ஆதிகாலத்தில் இக்கோவில் மண்ணாலும் பிறகு, செங்கல்லாலும் கட்டப்பட்டிருந்தது. பிறகு, நகரத்தாரின் முயற்சியால் கி.பி. 1864-ல் ராஜகோபுரம், விமானங்கள், இரண்டு சுற்றுப் பிராகாரங்கள் என விரிவுபடுத்தப்பட்டது.
இத்திருக்கோவிலைச் சுற்றி சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவர்களை நாய் கடித்துவிட்டால் அந்த விஷத்தால் எந்தத் தீமையும் நேராது. நாய்க்கடிபட்டவர்கள் இங்கு வந்து பைரவத் தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள நெல்லி மரத்தின் காயைத் தின்றால் உடனே நாய்க்கடி விஷம் நீங்கிவிடுமென்று சொல்லப்படுகிறது.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள் பைரவருக்கு உகந்த நாள் என்பதால், அந்நாட்களில் பைரவருக்கு சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் தீயசக்திகள் அண்டாது. குறிப்பாக சனி திசையால் பாதிக்கப்பட்டவர்கள் அன்று பைரவரை வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். ஏனெனில் சனி பகவானின் ஆசிரியர் பைரவர்.