நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து வருபவர் சந்திரன். சூரியனை வெங்கதிரோன் என்றும், சந்திரனை தண்கதிரோன் என்றும் அழைப்பர். உணவு, பயிர், அமுதம், இன்பம், கவிதை, காதல், பாற்கடல், குமுத மலர், கள், பெண் ஆகிய இன்பப் பொருட்களோடெல்லாம் தொடர்புடையவர் சந்திரன். சந்திரனை விரும்பாத மக்களே இல்லை. இவருக்கு லோகப்பிரியன் என்ற பெயரும் உண்டு.
இப்படி எல்லாருக்கும் பிரியமான சந்திரனுக்கு உள்ளத்தைக் கவரும் கதைகள் பல உள்ளன. வயது முதிர்ந்த ஒரு பெண்ணுக்கு நான்கு ஆண் குழந்தைகள். அவர்களுக்கு சூரியன், சந்திரன், வருணன், வாயு என்று பெயர் வைத்து வளர்த்து வந்தாள் அந்தத் தாய். ஒருநாள் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் நடந்த விருந்தில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு வந்தது. தாயின் அனுமதியோடு விருந்துக்குப் புறப்பட்டார்கள். அப்போது தாயார், “மகன்களே, விருந்தில் பரிமாறப்படும் பட்சணங்களில் ஏதாவது ஒன்றை எனக்குக் கொண்டு வாருங்கள்'' என்று சொல்லி அனுப்பினாள். நான்கு பேரும் விருந்தில் கலந்துகொண்டனர்.
இலைகளில் வடை, வாழைப்பழம், இனிப்பு என்று வகைவகையாகப் பரிமாறப்பட்டன. அந்த பட்சணங்களில் ஒவ்வொன்றையும் இலையில் வைக்கும்போதே கையில் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான் சந்திரன். மற்ற மூவரும் எல்லாவற்றையும் தின்றுவிட்டனர்.
விருந்து முடிந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள் பிள்ளைகள். அவர்களை எதிர்பார்த்திருந்த அன்னை, “எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?'' என்று ஆவலோடு கேட்டார். சூரியனோ, “சிறுவர்களுக்கு பந்தியில் பலகாரங்களே வைக்கவில்லை அம்மா'' என்றான். வருணனோ, “கொஞ்சமாகத்தான் போட்டார்கள். அதை சாப்பிட்டுவிட்டேன் தாயே'' என்றான். வாயுவோ, “உனக்கு பட்சணம் கொண்டுவர வேண்டும் என்பதை மறந்து போனேன் அன்னையே'' என்றான். சந்திரன் மட்டும் தான் கொண்டு வந்திருந்த பட்சணங்களை எடுத்து தாயாரிடம் கொடுத்தான். தாய்க்கு சந்திரன் மீது அளவு கடந்த அன்பு பொங்கியது.
“நீதானப்பா எனக்கு உகந்த பிள்ளை. உத்தம புத்திரன். மற்ற மூவரும் தங்கள் வயிறு நிறைந்தால் போதுமென்று உண்டுவிட்டனர். நீ மட்டுமே எனக்காக பட்சணங்களை தாய்ப் பாசத்தோடு கொண்டு வந்தாய். உன்னால் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். உன்னைத் தவிர மற்ற மூவரையும் மக்கள் அவ்வப்போது திட்டட்டும். உன்னை மட்டும் எப்போதும் களிப்போடு வாழ்த்தட்டும்'' என்று வரமளித்தார் அந்தத் தாய்.
அதனால்தான் சூரியன் சுட்டெரிக்கும்போது "பாழும் சூரியன்... இப்படி கொளுத்துகிறான்...” என்று, சூரியனால் பல நன்மைகள் இருந்தும்கூட மக்கள் திட்டுவதைப் பார்க்கிறோம். அதேபோல் மழையினால் உயிரினங்களுக்கு இன்றியமையாத நன்மைகள் இருந்தபோதும், விடாது மழை பெய்து சேதத்தை உண்டாக்கும்போது, "நாசக்கார மழை நிற்கமாட்டேன் என்கிறதே” என்று மக்கள் திட்டுவதைப் பார்க்கிறோம். வாயு பகவான் அனைத்து உயிர்களும் சுவாசிப்பதற்கும், தென்றலாகவும் வீசுகிறார். அதே நேரத்தில் கடும் புயற்காற்றாக மாறி வீசும்போது, "இந்த பேய்க் காற்று எப்போது நிற்கும்” என்று அவரையும் திட்டுகிறார்கள். ஆனால் சந்திரனை மட்டும் யாரும் திட்டுவதில்லை. சந்திரன் எனும் நிலவைக் கண்டால் எல்லாருக்குமே பரவசம்; ஆனந்தம்!