மங்கள்நாத் மந்திர். இந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்திலிருக்கும் உஜ்ஜயினி நகரத்தில் உள்ளது. செவ்வாய் கிரகத்திற்குரிய ஆலயமிது. செவ்வாய் பகவான் இங்குதான் பிறந்தார் என்பது வரலாறு. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கடுமையாக இருந்தால், அந்த தோஷத்தைப் போக்குவதற்காக இங்கு பூஜைகள் செய்யப் படுகின்றன. அதற்காகவே நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இங்குள்ள சிவபெருமான் மகா காளேஸ்வரரையே ‘மங்கள்நாத்' என்னும் பெயரில் செவ்வாயாக வழிபடுகிறார்கள். மங்களன் என்பது செவ்வாயின் பெயர்.
உஜ்ஜயினில் குடியிருக்கும் மங்கள்நாத் பகவானின் கதை:
பண்டைய காலத்தில் அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவபெருமானிடம் வரம் பெற்றான். அந்த வரத்தின்படி அவனுடைய இரத்தம் சிந்தும் இடங்களிலெல்லாம் அரக்கர்கள் பிறப்பார்கள். அந்த ஆணவத்தால் அவன் கொடுமைகள் பல புரிய, அதனைத் தாங்க முடியாத அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் தொடுத்தார். அந்த பயங்கர போர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், சிவபெருமானின் வியர்வை கீழே சிந்தியது. அதன் காரணமாக பூமி இரண்டாகப் பிளக்க, அங்கு செவ்வாயின் அவதாரம் நிகழ்ந்தது. சிவன், அரக்கன் அந்தகாசுரனை அழிக்க, அரக்கனின் குருதி கீழே சிந்தியது. சிந்திய இரத்தம் தரையில் விழாத வண்ணம் செவ்வாய் உட்கொண்டுவிட்டார். அதனால் அந்த பூமி சிவப்பு நிறமாக மாறியது. அதுவே உஜ்ஜயினி நகரம். இந்தக் கதை கந்த புராணத்தின் அவந்திகா காண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷத்திலிருந்து விடுபடலாம். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் லக்னம், 4, 7, 8, 12-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த ஜாதகர்கள் இங்கு வந்து விசேஷ பூஜைகளைச் செய்யவேண்டும். மார்ச் மாதத்தில் அங்காரக சதுர்த்தி நாளன்று மங்கள்நாத் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறும். அந்தநாளில் இங்கு யாகங்கள் செய்யப்படும்.
காலை 6.00 மணிக்கு ஆரத்தி நடைபெறும் சமயத்தில் கோவில் வளாகத்தில் ஏராளமான கிளிகள் இருக்கும். அந்த கிளிகளுக்கு பிரசாதம் அளிக்கப்படும். செவ்வாய் கிரகம்தான் கிளிகளின் வடிவத்தில் வந்து பிரசாதத்தைச் சாப்பிடுகின்றது என்பது பொதுவான நம்பிக்கை. திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தடை நீங்கி கட்டாயம் திருமணம் நடக்கும். அவ்வாறு திருமணம் நடந்தபிறகு கணவனும் மனைவியும் சேர்ந்து வந்து பக்திப் பெருக்குடன் வழிபடுவதை நாம் தினமும் பார்க்கலாம்.
சென்னையிலிருந்து உஜ்ஜயினி 2,157 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. உஜ்ஜயினி ரயில் நிலையத்திலிருந்து இந்த ஆலயம் நான்கு கிலோமீட்டர் துரத்தில் இருக்கிறது. அருகிலிருக்கும் விமான நிலையம் இந்தோர். அங்கிருந்து உஜ்ஜயினி 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உஜ்ஜயினி மங்கள்நாத் ஆலயத்திற்குச் சென்று செவ்வாய் பகவானின் பேரருளைப் பெற்று வாருங்கள்!
- மகேஷ் வர்மா