Skip to main content

தனுசு ராசியில் செவ்வாய்,சனி! விபரீதம் விளையுமா?

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

ரு ராசியில் ஒரு பாவ கிரகம் இருந்தாலே சற்று சிரமம்தான். இதில் வலுவான இரு பாவர்கள் சேர்ந்திருப்பின் அதிரிபுதிரிதான். கலவரம்தான்.

இவ்வருடம் சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். இதில் செவ்வாயும் இப்போது சேரப்போகிறார். செவ்வாய், வாக்கியப்படி மார்ச் 10 முதல் மே 1 வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார்.

திருக்கணிதப்படி, மார்ச் 7 முதல் மே 2 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்துவிட்டு, பின் மகரத்துக்குச் சென்றுவிடுவார்.

ஆக, மார்ச் முதல்வாரத்திலிருந்து ஏப்ரல் மாத இறுதிவரை சனியுடன், செவ்வாய் சேர்ந்திருக்கப் போகிறார்.

சனி, செவ்வாய் இருவரும் மிகக் கொடுமையான பாவகிரகங்கள். இவர்கள் தற்போது தங்கப்போவது தனுசில். இதுமட்டுமல்லாது செவ்வாய் தனது 8-ஆம் பார்வையால் ராகுவைப் பார்க்கிறார்.

இதன்மூலம் சனி, செவ்வாய், ராகு என்ற இணைவு ஏற்படும். இது சற்று கெடுதலான காலகட்டம்தான். இது குருவின் வீடு. தனுசு காலபுருஷனின் ஒன்பதாம் வீடு எனும் தர்ம ஸ்தானம். ஒரு தர்மவீட்டில் இரு பாவர்கள் தங்கப்போகிறார்கள் எனில் விளைவுகள் என்னவாகும்?

தனுசு எனும் ஆன்மிக இடத்தில் இரு பாவர் தங்கும்போது, ஆன்மிக இடங்களை, கோவில்களை பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள். இரு அழிவு கிரகங்களும் சேரும்போது, கோவில்கள், ஆன்மிக மடங்கள், யாத்திரை ஸ்தலங்கள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, செவ்வாய் நெருப்புக்கும், மின்சாரத்துக்கும் உரியவர். எனவே மின்சாரம் சம்பந்தமானவை சரியான நிலையில் உள்ளதா என சரிபார்த்து பழுது நீக்குதல் அவசியம். இக்காலகட்டத்தில் மின்சாரம் பழுதுபார்ப்போர், மின்சாரப் பொறியாளர்கள் மற்றும் மின்சாரம், நெருப்பு சம்பந்தமான பணியில் உள்ளோர் தங்கள் அருகிலுள்ள கோவில்கள், தர்மஸ்தாபனம், பசு மடங்கள் போன்றவற்றில் இலவசமாகவோ அல்லது பகுதி மக்களின் பங்களிப்புடனோ, மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உதவலாம். இது பெரிய புண்ணிய காரியமாகும்.

தனுசு என்பது காலபுருஷனின் 9-ஆம் இடம். இது அரசு மற்றும் அரசியலைக் குறிக்குமிடம். இதில் சனி, செவ்வாய் இருவரும் அமர்ந்துள்ள காலகட்டத்தில் அரசியல் அசிங்கமாகும். அரசியல்வாதிகளின் முகமூடி கிழியும். இதுவரையில் மக்களுக்குத் தொல்லை கொடுத்து, தங்களுக்கு மட்டும் நல்லது செய்துகொண்ட அரசியல்வாதிகள் ஒன்று ஓட்டமெடுப்பார்கள் அல்லது சிறையில் தண்டனை பெற்று ஒடுங்கிவிடுவர் அல்லது நோய்த் தாக்கத்தால் படுத்துவிடுவர். சனி காலபுருஷனின் 10, 11-ஆம் அதிபதியாகவும், செவ்வாய் 8-ஆம் அதிபதியாகவும் இருப்பதால் இது நிகழும்.

சில அரசியல்வாதிகள் விபத்தைச் சந்திப்பார்கள். சில வயதான, பழுத்த அரசியல்வாதிகளின் உடல்நலன் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

சமையல் செய்யும்போது கவனம் தேவை. அதிலும் மிக அதிக அளவில் சமையல் செய்யும் இடங்களான உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், மடப்பள்ளிகள், அன்னதானக்கூடங்கள் போன்றவற்றில் அதிக கவனம் தேவை.

உயர்கல்வியில் நிறைய குழப்பம் தோன்றும். அதன்விளைவாக போராட்டம் நடக்கும்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், டாக்டரேட் எனும் முதுநிலைப் படிப்பு ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

மார்ச் மாதக் கடைசி வாரத்தில் செவ்வாய் மூல நட்சத்திர 4-ஆம் பாதத்தில், கடக அம்சம்- தனது நீச அம்சத்தில் செல்வார். அப்போது பூமி சம்பந்தமான விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் இன்னொரு விஷயம் உள்ளது. செவ்வாய் நீசமாவது கடக அம்சம் எனும் நீர் ராசியில். தற்போது ராசியில்- கடகத்தில் ராகு அமர்ந்துள்ளார். எனவே பூமி அதிர்ச்சி, சுனாமி போன்ற கொடும் நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. செவ்வாய் பூமிகாரகன் ஆவார். ராசியில் ராகு, செவ்வாய் சம்பந்தமும் உள்ளது.

தனுசு ராசி, இந்தியாவின் தென்கோடி மற்றும் இலங்கையைக் குறிப்பதாக உள்ளது. எனவே அப்பகுதிகளில் கவனம் தேவை.

செவ்வாய், சனி சேர்க்கை என்பது எப்போதும் விபத்துக்களைக் குறிக்கும். எனவே செவ்வாய், சனியைவிட்டு விலகி, மகரத்துக்குச் செல்லும்வரை அதிக எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். (இப்போதுதான் நமது அறிவு விபரீதமாக நிறைந்து வழியும்.)

செவ்வாய், சனி சேர்க்கை தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைக் குறிக்கும். காவல்துறை அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.செவ்வாய், சனி போராட்டங்களைக் குறிப்பர். போராட்டத்துக்கு குறைச்சலே இராது.

செவ்வாய் பூராட நட்சத்திரத்தில் (ஏப்ரல் மாதம்) செல்லும்போது கலைத்துறை ஆட்டம் காணும். புகழ்மிக்க கலைஞர்கள் சிலர் விபத்தை சந்திக்க நேரிடும். மேலும் கலைத்துறையைச் சேர்ந்த பெண்கள் சிலர் பெரும் விபத்து அல்லது பெரும் அவமானத்தைச் சந்திக்க நேரிடும். படப்பிடிப்புகளின்போது பாதுகாப்பு அவசியம்.

murugan

தனுசு ராசி ஒரு நெருப்பு ராசி. சனி ஒரு காற்று கிரகம். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம். எனவேதான் தனுசு ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை நெருப்பு சம்பந்தமான விபத்துக்களை அதிகம் ஏற்படுத்தும். அதிலும் தனுசு நெருப்பு என்பது, விளக்கின் சுடர் என்பர்.

எனவே கோவில்கள், பூஜையறைகள் போன்ற இடங்களில் அதிக கவனம் தேவை.

செவ்வாய் ரத்தத்தின் காரகர். எனவே பயணங்களில் கவனம் தேவை. செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடப்பவர்கள் முடிந்தால் ரத்த தானம் செய்யவும். அல்லது சிவப்புநிற ஆடைகள் வாங்கி தானம் செய்யவும்.

ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை.

செவ்வாய் ஏப்ரல் மாதக்கடைசியிலும் மே மாத முதலிலும் உத்திராடம் எனும் சூரிய சாரத்தில் செல்வார். உத்திராடம் 1-ல் செல்லும்போது, அம்சத்திலும், தனுசில் இருப்பார். அப்போது செவ்வாய் வர்க்கோத்தமம் பெறுவார். எனவே அந்த காலகட்டம் அரசியல், அரசு, அரசு சார்புடையவை மிக மாறுதல் பெறும்.

இது சித்திரை 12 முதல் 19 வரை இருக்கும். உத்திராடம் என்பது சூரிய சார நட்சத்திரம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சமடைந்திருப்பார் என்பது நீங்கள் அறிந்ததுதான். எனவே இக்காலகட்டம் அரசில், அரசியலில் ஏதோ ஒரு நல்லமாற்றம், ஒரு ஸ்திரத்தன்மை, மேன்மையான ஏற்றம் ஏற்படும்.

செவ்வாய் கெடுதல் செய்வார் என எழுதிவிட்டு இப்போது மாற்றி பேசுகிறீர்களே என சொல்லக்கூடாது. ஏனெனில், செவ்வாய் நின்ற சாரநாதர் செவ்வாயின் வீட்டிலேயே உச்சமாவதால், மிக நல்லபலன்களை ஒரு வாரத்திற்கு மட்டும் கொடுக்கக் கடமைப்பட்டவராகிறார் செவ்வாய்.

மேலும் வர்க்கோத்தமம் பெற்ற செவ்வாய் மிக பலத்துடன் பலன்களை வாரி வழங்குவார்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, "ஒருமாதிரி கிலிபிடித்துவிட்டது. இதற்கெல்லாம் என்னதான் பரிகாரம்? நிறைய பரிகாரம் செய்யணும் போலிருக்கே' என மலைக்கவேண்டாம்.

இந்த சனி, செவ்வாய் சேர்க்கை நெருப்பு ராசியில் உள்ளதால், நெருப்பு தானம்தான் ஒரேவழி. அதனால் கோவில்களில் நிறைய தீபமேற்றுங்கள். தீபமேற்ற எண்ணெய், தீப்பெட்டி போன்றவை தானம் நன்று.

மேலும் உங்களால் முடிந்த, உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, மண் அகல்விளக்கு ஆகியவற்றை கோவில்கள், மடங்கள் போன்றவற்றுக்கு தானம் செய்யவும்.

மின்சார விளக்கு வாங்கிக்கொடுக்கலாம். மின் கட்டணம் செலுத்தலாம். டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் போன்றவற்றை வாங்கிக்கொடுக்கலாம். கோவில்களின் மடப்பள்ளிகளில் எரிபொருள் செலவைச் செய்யலாம். கோவில்களில் விளக்கேற்றுவோர் பெரும்பாலும் தீப்பெட்டிக்குத் திண்டாடுவர். அதனால் உங்களால் முடிந்த அளவு தீப்பெட்டிகளை வாங்கி வைக்கவும்.

தேவைப்பட்டோர் "அப்பாடா' என பயன்படுத்துவர். இதுவொரு சிறு விஷயமாகத் தோன்றும். ஆயினும் அவசர காலமறிந்து செய்யும் உதவி இது.சனி, செவ்வாய் சேர்க்கை ஆதலால், உங்களின் அத்தனை பரிகாரங்களும் பழமையான- அதிக மக்கள் சென்றுவராத, உதவி தேவைப்படும் கோவில்களாக இருக்கட்டும். அங்குள்ள அர்ச்சறகர்களின் தேவையைக் கேட்டு உதவுங்கள்.

இது முழுக்கமுழுக்க பொதுநலன் கருதி செய்யப்படுவது.

உங்கள் குடும்பம், உங்கள் குழந்தை குட்டிகள் எனச் சார்ந்தே அத்தனை வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் செய்கிறீர்கள். ஒரு ஒன்றரை மாதத்திற்கு, சனியை விட்டு செவ்வாய் விலகும்வரை பொதுமக்களுக்காக- அடுத்தவர்களுக்காகப் பரிகாரம் செய்யுங்களேன்.

இவ்வளவு சொல்லிவிட்டீர்கள்! "இதற்கெல்லாம் ஒரே சாமியைச் சொல்லுங்கள், நாங்கள் கும்பிட்டுக்கிறோம்' என்கிறீர்களா?

இத்தனை கஷ்டத்தில் இருந்தும் நம்மைக் காத்து ரட்சிப்பவள் துர்க்கை ஒருத்திதான். அந்தக்காளியின் கருணையை வேண்டுங்கள். சாமுண்டீஸ்வரியைச் சரணடையுங்கள். துர்க்கையைத் துதியுங்கள். மகாமாரியை மனதார வேண்டுங்கள். பத்ரகாளியின் பாதம் பணியுங்கள். வராஹியிடம் வரம் வேண்டுங்கள், பிரத்தியங்கரா தேவியின் பாதம் பணியுங்கள். வக்ரகாளியை வணங்குங்கள். தில்லைக்காளியிடம் சரணடையுங்கள். பட்டீஸ்வரம் துர்க்கையைப் பணியுங்கள். துர்க்காஷ்டகம் கூறி, எல்லாவல்ல அந்த மகிஷாசுரமர்த்தினியை வணங்குவோம். அவள் தாய். நாம் குழந்தைகள். அந்த லோக மாதா குழந்தைகளாகிய நம்மை ஒரு நாளும் கைவிடமாட்டாள்.