'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "முருகனுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது. செந்தில்குமரர், திருமால் மருகன் என்று பெயர் இருக்கிறது. சேவற்கொடியோன் என்றும் பெயர் இருக்கிறது. அவரைக் கொண்டாடுபவர்கள் பல பெயரில் அழைக்கிறார்கள். பழனியப்பன் என்று பெயர் இருக்கிறது. பல பெயர்களைத் தாங்கி நிற்கக் கூடிய முருகப் பெருமானுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது என்ன தெரியுமா? அந்த பெயர் சிரங்கப்ப ராயர். அவன் அதிபதி. செல்வத்துக்கு அதிபதி. நிலத்துக்கு அதிபதி. இந்த உடலுக்கும், உயிருக்கும் அவன்தான் அதிபதி. ஆனால், சிரங்குக்கும் அவன்தான் அதிபதி.
இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா? செந்தில் குமரன்; திருமால் மருகன்; சிந்தைக் கொடி கொண்ட தேசிகன் மீது தீராதப் பற்று வைத்திருந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவருடைய அந்திமகாலத்தில் அவருக்கு உடம்பு முழுவதும் வெப்பு; உடம்பு முழுவதும் கொப்புளம். அவரைப் பார்ப்பதற்கு ஒரு பேராசிரியர் வந்தார். “ஐயா கவிமணி, உங்கள் உடம்புக்கு என்னாச்சு” என்று கேட்டார். இதை சிரங்குன்னு சொல்லிருக்கலாம். அவர் சிரங்குன்னு சொல்லல. எல்லா கொப்புளமும் ஒவ்வொரு கலரில் இருக்கிறது. அவர் அந்த சிரங்கை பார்த்துட்டு சொன்னார்: முத்து, பவளம், முழு வைரம், மாணிக்கம், பத்தி ஒளி வீசும் பதக்கம். சித்தன், சிரங்கப்ப ராயன் எனக்கு தரம் கண்டு தந்த தனம் என்று பாடினார். எனக்கு உயிர் தந்தது முருகன் தான். எனக்கு உடைமை தந்தது முருகன் தான். எனக்குப் புலமை தந்தது முருகன் தான். என்னைக் கவி எழுதச் சொன்னது முருகன் தான்.
எனக்குக் கல்வெட்டு ஆராய்ச்சிக்குக் கதவு திறந்து வைத்தது முருகன் தான். எனது வாழ்விலும், தாழ்விலும் என்னோடு இருப்பவனும் முருகன் தான். அப்போது அந்த சிரங்குக்கு அவன்தானே அதிபதி. அதனால், நான் அவனை சிரங்கப்பராயன் என்று சொல்லுகிறேன். செந்தில் குமரன் என்கிற திருச்செந்தூர் முருகனுக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிரங்கப்பராயன் என்று பெயர் சூட்டினார். அந்தப் பேராசிரியர் கேட்டார். இதற்கு நீங்கள் எந்த மருந்தும் வாங்கவில்லையா? என்று.
உண்ட மருந்தாலும், உடல் முழுவதும் பூசிக்கொண்ட மருந்தாலும் மண்டு சிரங்கப்பராஜா என கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால் நான் முருகனிடம் கேட்கிற ஒரே வரம் என்ன தெரியுமா? எனக்கு விடிய மட்டும் சொறியனும், அதுக்கு எனது இரண்டு கைகள் போதாது என்று கூறினார். இப்படி முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும், முருகனுக்கு சிரங்கப்பராஜன் என்று ஒரு திருநாமமும் இருக்கிறது. அது பல பேருக்குத் தெரியாது. உலகத்தில் இருக்கின்ற நேயர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன். முருகனுக்கு இன்னும் ஒரு பெயர் இருக்கிறது.
ஆகவே, செந்தில் ஆண்டவர், சிந்தைக் கொடி கொண்ட தேசிகர், அதைத் தாண்டி அவன் சிரங்கப்பராஜர், பகலிக்கூத்தருக்கு வயிற்று வலி வந்தபோது, பகலிக்கூத்தரின் வயிற்று வலியைத் தீர்த்ததனால் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் என்று சொல்லி பகலிக்கூத்தர் திருச்செந்தூர் முருகன் மீது ஒன்று பாடினார். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இடங்களில் காலாலே நடந்தான் ஆதிசங்கரர். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆதிசங்கரர் என்றால் யார்? சிவபெருமானின் அம்சம் என்று பேசப்பட்டவர். அவருக்கே உடல் சரியில்லை.
ஆதிசங்கரர் திருச்செந்தூர் வந்தார். முருகனைக் கண்களிக்கக் கண்டார். தன்னுடைய நோயையும், தன்னுடைய ஆற்றாமையும் அழுது புலம்பினார். பன்னீரிலே பிரசாதம் வாங்கினார். நெற்றி நிறையப் பூசிவிட்டு, கோவிலில் இருந்து வெளியே வந்தார். அவரது உடலில் இருந்த நோயும், வலியும் உடனடியாகப் பறந்து போனது. திருச்செந்தூர் முருகனுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதை நான் சொல்லவில்லை. ஆதி சங்கரர் பகவத் பாதர் என்கிற காலடி சங்கரரே அறுதியிட்டுச் சொல்லுகிறார். ஆகவே, முருகனை முதலாகக் கொண்டவர்கள், முருகனை மூலதனமாகக் கொண்டவர்கள். எதுவாக இருந்தாலும் முருகனுக்கு அர்ப்பணிக்கிறவர்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள். நேற்றைக்கும் இருந்தார்கள் என்பதற்கு உதாரணம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை". இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.