சித்தேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலம், ஹேமந்த் நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் இருக்குமிடத்திற்குப் பெயர் டோக்கா. அருகிலிருக்கும் நகரம் நேவாஸா. சிவபெருமான் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தை ராமர் உருவாக்கினார் என்பது வரலாறு. ப்ரவரா, கோதாவரி ஆகிய இரு நதிகள் சங்கமிக்கும் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
பாரதத்தில் பல சித்தேஸ்வரர் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் புகழ்பெற்றதாக இவ்வாலயம் விளங்குகிறது. "ஹேமத்பாண்டி' என்ற கட்டட பாணியில் கட்டப்பட்ட ஆலயமிது.இப்போதிருக்கும் ஆலயம் 1767-ஆம் ஆண்டில் பெஷாவர் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. விஷ்ணு மகாதேவ் கட்ரி என்ற மன்னர் இந்தத் திருப்பணியைச் செய்தார். இந்த ஆலயத்தில், இராமாயண, மகாபாரதக் காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்கள் கலை வேலைப்பாடுகளுடன் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன.
ஆலய வளாகத்திற்குள் விஷ்ணு, துர்க்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இவற்றைக் கட்டிய மன்னனின் பெயரிலேயே தெய்வங்களின் பெயர்களும் "விஷ்ணு மகாதேவ் கட்ரி' என்ற பெயரில் விஷ்ணு, சிவன் (மகாதேவ்), துர்க்கை (கட்ரி) என்றுள்ளன. துர்க்கை ஆலயத்திற்கு "கஜாரா மாதா மந்திர்' என்னும் பெயரும் உண்டு.
இராமாயண காலத்தில், வனவாசத்திற்குச் சென்ற ராமர், லட்சுமணன், சீதை மூவரும் தண்டகாரண்யம் என்ற வனப்பகுதியில், கோதாவரி ஆற்றின் கரையிலிருக்கும் பஞ்சவடியில் இருந்தபோது, ஒரு பொன்மானைக் கண்டாள் சீதை. அது தனக்கு வேண்டுமென அவள் கேட்க, ராமர் அந்த மானைப் பிடிக்கத் துரத்திச் சென்றார். அந்தப் பொன்மானாக வந்தவன் அரக்கனான மாரீசன் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது. அவனை அனுப்பி வைத்தவன் இராவணன்.
மான்மீது ராமர் அம்பெய்ய, மான் இறந்து விழுந்தது. அந்த இடம்தான் டோக்கா. அந்த இடம் கூட அம்பைப் போலவே காட்சியளிக்கும். நாசிக்கிலிருந்து 171 கிலோ மீட்டர் தூரத்தில் டோக்கா இருக்கிறது. அம்பின் நுனிப்பகுதியை "டோக்கா' என்று மராத்தி மொழியில் கூறுவார்கள். மாரீசன் மீது அம்பெய்து, அவனை சொர்க்கத்திற்கு அனுப்பிய உயர் செயலைச் செய்தார் ராமர்.
அந்த இடத்தில் ராமர் சிவனை வழிபட்டார். அவரின் கையால் உருவான சிவலிங்கம்தான் இப்போது சித்தேஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது. 5,000 வருடங்களுக்கு முன்னர் உருவான ஆலயமிது. தற்போதுள்ள ஆலயம் 18-ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதென்றாலும், அங்கிருக்கும் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் பழமையானவை.
சைவம், சாக்தம், வைணவம் என்று சிவன், துர்க்கை, விஷ்ணு ஆகிய மூவகை சமயக் கடவுள்களையும் வழிபடும் பக்தர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.
இந்த ஆலய மேற்கூரையில் ராசலீலை, பாகவத புராணம் ஆகியவை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் ரயிலில் பயணித்து, 1,096 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அஹ்மத் நகரில் இறங்கி, அங்கிருந்து பேருந்து அல்லது காரில் 70 கிலோமீட்டர் தூரத்திலுள்ள டோக்காவிற்குச் செல்லலாம்.
மும்பைக்குச் செல்லும் ரயிலில் பயணித்தால், டவுண்ட் என்ற நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 130 கிலோ மீட்டர் தூரம் பயணித்து டோக்காவை அடையலாம். டோக்கா சித்தேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்பவர்கள், கோதாவரி நதியின் அழகையும் பருகிவிட்டு வரலாமே!
- மகேஷ் வர்மா