சிவ. சேதுபாண்டியன்
மனிதன் இறைவனை வழிபடும்போது "தா வரம்' என்றான். இறைவனோ தாவரத்தையே வரமாகக் கொடுத்தான். தாவரங்கள் மனித குலத்துக்கு மட்டுமின்றி, மற்ற உயிரினங் களுக்கும் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. நோய்களை நீக்கும் ஆற்றல் படைத்தவையாகத் திகழ்கின்றன. இறைவழிபாட்டுக்கும் ஏற்றவை தாவரங்களே. வில்வம் சிவனுக்கு உகந்தது. வில்வ தீர்த்தத்தை சிவன் கோவிலிலில் நமக்குத் தருவார்கள். ஒரு சிவராத்திரியன்று வேடன் ஒருவன் வில்வ இலையை அர்ப்பணித்ததால், அவன் முக்தியடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. துளசி இலை பெருமாளுக்கு உகந்தது. இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்த வல்லது. பெருமாள் கோவில்களில் துளசித் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.
அம்பிகைக்கு உகந்தது வேப் பிலை. இது ஒரு கிருமி நாசினி, பிராண வாயுவை அதிகம் வெளிப் படுத்தக்கூடியது என்பதால் வீடுகளில் வேப்பமரம் வளர்க் கிறோம். விநாயகருக்கு அறுகம்புல் ஏற்றது. இது அபார குளிர்ச்சி யுடையது. விஷம் போக்கும் தன்மை யுடையது. ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மையும் அறுகம்புல்லிலில் இருப் பதாக சித்த மருத்துவம் சொல்கிறது. இறைவழிபாட்டோடு இப்படிப்பட்ட விருட்சங்களை முன்னோர்கள் இணைத் திருப்பதன் காரணம், உள்ளமும் தூய்மையடைய வேண்டும்; உடலும் பலம் பெறவேண்டும் என்பதற்காகவே.
துளசியை வீட்டில் வளர்த்தால் லட்சுமி தேவி இல்லத்தில் குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் வீட்டின் முன்பகுதியில் துளசி மாடம் அமைத்து வழிபடுவது நல்லது. சுமங்கலிலிப்பெண்கள் துளசி மாடத்தைத் தூய்மை செய்து கோலமிட்டு. தீபமேற்றி, துளசிக்குரிய மந்திரம், லட்சுமிக்குரிய மந்திரம் கூறி வழிபட்டால் வீட்டில் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும். தனவரவைப் பெருக்கும் வழிபாடாக தாவர வழிபாடு அமைகிறது. ஜோதிடத்தில் காலச் சக்கரப்படி எட்டாவது ராசியாக விளங்கும் விருச்சிகம்தான் விருட்சங்களுக்குரிய ராசியாக விளங்குகிறது. எனவே விருச்சிக ராசிக்காரர்கள் 27 நட்சத்திரங் களுக்கும் உரிய தாவர வழிபாடு செய்தல் அவசியம். மற்றவர்கள் அவரவர் நட்சத்திர விருட்சங்களை வழிபடலாம். மனதார வழிபாடு மேற்கொண்டால் அந்த தாவரங்களின் வாயிலாக இறைவனிடம் நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும்.
நாம் கோவிலுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் தல விருட்சங்களையும் வழிபடவேண்டும். அப்போதுதான் வம்சம் விருத்தியாகும். பலா மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட் டால் பணவரவு பெருகும். வாழை மரம் தலவிருட்சமாக உள்ள கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வாரிசு உருவாகும். தனவரவைத் தரும் தாவரங்களை வீட்டில் வைத்து அதிகாலைப்பொழுதில் வழிபட்டால் நல்ல பலன்களைப் பெறமுடியும். 27 நட்சத்திரங்களுக்குரிய தாவரங் களும் ஒரே இடத்தில் வளர்வது எளிதில்லை யென்றாலும், சில ஆலயங்களில் நட்சத் திரங்களுக்குரிய விருட்சங்கள் வளர்க்கப் பட்டு வருகின்றன. அதையறிந்து வழிபடுதல் நலம். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையிலுள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய விருட்சங்களும் ஒரே இடத்தில் உள்ளன.
தாவரப் பரிகாரம்
நட்சத்திரத்திற்குரிய ஆலயம் சென்று விருட்சங்களை வழிபட முடியாதவர்கள் அவரவர் நட்சத்திரத்திற்கான செடியை அல்லது விருட்சத்தை படமாக வைத்து வீட்டில் பூஜிக்கலாம். அப்படிச் செய்வதால் தாவர வழிபாடு தக்க பலன்களைத் தந்தே தீரும்.