Skip to main content

நீதிமன்ற வழக்குகளில் நல்ல தீர்ப்பைப் பெற; ‘பாசுகிநாத் மந்திர்’ வழிபாடு

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

basukinath mandir  temple

 

பாசுகிநாத் மந்திர்’ இந்த ஆலயம் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளது. ஜார்கண்டில் இருக்கும் வைத்தியநாத் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கும் கட்டாயம் செல்வார்கள். இங்கு செல்லாமல் வந்துவிட்டால், அந்தப் பயணமே பயனற்றதென்று சாஸ்திரம் கூறுகிறது. தேவ்கரிலுள்ள வைத்தியநாத் ஆலயத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில், ஜரமுண்டி என்ற கிராமத்தில் பாசுகிநாத் மந்திர் இருக்கிறது. இந்த ஆலயத்திற்குள் பல சிறிய கோவில்களும் இருக்கின்றன.

 

வழக்கு, சண்டை, நீதிமன்றம் என்று அலைந்துகொண்டிருப்பவர்கள் இங்கு சென்று வழிபட்டால் நல்ல தீர்ப்புகள் கிடைக்குமென்பது பொதுவான நம்பிக்கை. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள் "பாபா நாகேஷ்' என்றும் அழைக்கிறார்கள்.

 

வைத்தியநாத் ஆலயத்திலிருக்கும் சிவலிங்கத்தை காமனா லிங்கம் என்பார்கள். அந்த சிவிலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்துவிட்டு வரும் பக்தர்கள், அதற்கடுத்து பாசுகிநாத் நாகேஷ் ஜோதிர்லிங்கத்திற்கும் நீரால் அபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்.

 

வைத்தியநாத் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இரு பக்கங்களிலும் நீர்க் கலசங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் காவடியைத் தோளில் தூக்கியபடி 110 கிலோமீட்டர் தூரம் நடந்துவருவார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் பாகல்பூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் கஞ்ச் என்ற இடத்தில் கங்கைநதி வடக்குநோக்கித் திரும்புகிறது. அந்த இடத்தில்தான் காவடி தூக்கிவருபவர்கள் கலசத்தில் நீரைப் பிடிக்கவேண்டும். வழியில் எந்த இடத்திலும் தரையில் அதை வைக்கமாட்டார்கள்.

 

அதற்கென இருக்கும் மரக்கொம்புகளில்தான் (ஆங்காங்கே இருக்கும்) அந்த காவடியைத் தொங்கவிடவேண்டும். 110 கிலோமீட்டர் தூரம் பயணித்து வைத்தியநாத் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அங்கிருந்து 42 கிலோமீட்டர் தூரம் பயணம்செய்து, பாசுகிநாத் ஆலயத்தை அடையவேண்டும். பலர் காவடியுடன் வாகனங்களிலும் பயணிக்கிறார்கள்.

 

பாசுகிநாத் ஆலயத்திலிருக்கும் சிவனை மனமுருக வழிபட்டால், மனதில் நினைக்கும் அனைத்து விஷயங்களும் உடனடியாக நிறைவேறும் என்பது ஆழமான நம்பிக்கை. புராணத்தில் பாசுகிநாத் ஆலயம் காட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. பண்டைக் காலத்தில் அந்தப் பகுதி "தாருகா வனம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த ஆலயத்தைப் பற்றி கூறப்படும் கதை இது...

 

பாசுகி என்ற காட்டுவாழ் மனிதன் நிலத்திற்குக் கீழே இருக்கும் கிழங்குகளை மண்வெட்டியின் மூலம் தோண்டிக் கொண்டிருந்தபோது, அவனுடைய மண்வெட்டி அங்கிருக்கும் சிவலிங்கத்தின் மீது பட்டு, சிவலிங்கத்திலிருந்து பால் வர ஆரம்பித்திருக்கிறது. அதைப் பார்த்து பதைபதைப்பு அடைந்துவிட்டான் பாசுகி. அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு அசரீரி, "என்னைக் கண்டு பயப்படாதே. நான்தான் சிவன். என்னை வழிபடு. உனக்கு அருள் தருவேன்' என்று கூறியிருக்கிறது. பாசுகி வழிபட்ட அந்த இடம்தான் இப்போது "பாசுகிநாத்' என்று அழைக்கப்படுகிறது.

 

அங்கு சிவன்-பார்வதி இருவருக்கும் பெரிய கோவில்கள் இருக்கின்றன. இங்கு வருபவர்கள் வில்வம், மலர்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுகிறார்கள். வருடத்திற்கொரு முறை இந்த ஆலயத்தில் ருத்ராபிஷேகம் நடக்கும். அப்போது அங்கு ஆறென பால் ஓடும். ருத்ராபிஷேகம் செய்யும்போது நெய், தேன், தயிர் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வார்கள்.

 

வருடம் முழுவதும் அங்கு பக்தர்களின் கூட்டம் இருக்கும். குறிப்பாக சிரவண மாதத்தில் (ஆடி) மிகவும் அதிகமான கூட்டமிருக்கும். அந்த ஒரு மாதம் தவிர, மற்ற மாதங்களில் அனைத்து பக்தர்களும் சிவனைத் தொட்டு வணங்கலாம்.

 

சென்னையிலிருந்து ராஞ்சிக்குச் செல்லும் ரயிலில் 1,610 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஆலப்புழையிலிருந்து சென்னை வழியாக ராஞ்சிக்குச் செல்லும் தன்பாத் விரைவு வண்டியில் செல்லலாம். ராஞ்சியிலிருந்து 274 கிலோமீட்டர் தூரத்தில் பாசுகிநாத் மந்திர் உள்ளது. ராஞ்சியில் விமான நிலையமும் உண்டு.

 

வாழ்க்கையில் ஒருமுறையாவது பாசுகிநாத் மந்திர் என்ற இந்த ஆலயத்திற்கு சென்றுவந்து, சிவனின் பேரருளைப் பெறலாமே!

-மகேஷ் வர்மா