ஒரு குடும்பத்திலுள்ள சகோதரர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள், மோதல்கள் உண்டாக ஜோதிட ரீதியான காரணம் என்ன?
ஒரு ஜாதகத்தில் 2-ஆம் பாவம் கெட்டுப்போனால், அந்த குடும்பத்தில் பிரச்சினைகள் அனைத்தும் சகோதரர்களுக்கிடையே உண்டாகும். 2-ஆம் பாவத்திற்கு அதிபதி நீசமடைந்தால் அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்திருந்தால் அல்லது 2-ஆவது பாவத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால் அந்த வீட்டில் அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது. 2-ஆவது பாவத்தில் சனி, செவ்வாய், ராகு இருந்தால், பொருள் அல்லது பதவிக்காக எதிர்பாராத வகையில் சண்டைகளும் மோதல்களும் சகோதரர்களுக்கிடையே உண்டாகும்.
2-ஆம் பாவத்திற்குரிய கிரகம் 8-ல் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், பெற்ற தாயையும் தந்தையையும் யார் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொள்வது என்பதில் சகோதரர்களுக்கிடையே சண்டை ஏற்படும். லக்னத்தில் செவ்வாய், 2-ல் சனி, 4-ல் சூரியன் இருந்தால், அந்த குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். தசாகாலங்கள் சரியில்லையென்றால் வீட்டில் எப்போதும் பிரச்சினைதான். ஜாதகத்தில் 7-ல் சனி, 8-ல் ராகு- செவ்வாய், செவ்வாய்- ராகு- சூரியன் அல்லது ராகு- சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை இருந்தால், அந்த வீட்டில் அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது. ஆணவம் தலைக்கேறி ஒருவரோடொருவர் வீணாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.
3-க்கு அதிபதி 2-ல் இருந்து, 2-ஆம் அதிபதி பலவீனமாக இருந்து, சுகாதிபதி (4-க்கு அதிபதி), கெட்டுப் போயிருந்தால் அல்லது நீசமடைந்தால் சகோதரர்களுக்கிடையே எப்போதும் பிரச்சினைதான். பண விஷயத்தில் யாரும் ஒழுங்காக நடந்துகொள்ள மாட்டார்கள். ஒரு சகோதரரிடமிருந்து பணத்தைப் பெறும் இன்னொரு சகோதரர் அதைத் திருப்பித் தரமாட்டார். அதனால் அவர்களுக்குள் பிணக்கு ஏற்படும். ஜாதகத்தில் 4-ல் கேது, 6- சூரியன், 7-ல் செவ்வாய், 9-ல் சனி இருந்தால், அந்த வீட்டில் அவசியமற்ற விஷயங்களைப் பேசுவதன் காரணமாக வீண் சண்டை உண்டாகும். அங்கு சுப காரியங்கள் எதுவும் நடக்காது. வீட்டில் யாரிடமும் ஒற்றுமையுணர்வு இருக்காது.
லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த குடும்பத்தில் அவசியமற்ற பேச்சுகள் இருக்கும். வீண் சண்டைகள் நடக்கும். தந்தையுடனும் சகோதரர்களுடனும் வாத- விவாதங்கள் நடக்கும். அதன் காரணமாக பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும். லக்னத்தில் நீசச் செவ்வாய் இருந்து, 2-ல் சனி இருந்தால், அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது. சுக்கிரன் நீசமாக இருந்து, ராகு 3, 6, 12-ல் இருந்து, லக்னத்தில் செவ்வாய், 2-ல் சனி, 4-ல் அல்லது 7-ல் சூரியன் இருந்தால், அந்த குடும்பத்திலுள்ள சகோதரர்களுக்கிடையே நல்லுறவு இருக்காது.
லக்னத்தில் சூரியன், 2-ல் சனி, 5-ல் கேது, 10-ல் செவ்வாய் இருந்தால், அவர் என்னதான் கடுமையாக உழைத்து குடும்பத்திற்குச் செலவழித்தாலும், அவரை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிதாக எண்ணமாட்டார்கள். அவருடன் சண்டை போடுவார்கள். அதனால் அவருக்கு மனதில் சந்தோஷமே இருக்காது. ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், 4-ல் ராகு, 8-ல் சனி இருந்தால் சகோதரர்களால் அவருக்குப் பிரச்சினைகள் உண்டாகும். தன் வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்கு எவ்வளவோ நன்மைகளை அவர் செய்திருந்தாலும், அவற்றை யாரும் நினைத்துப் பார்க்கமாட்டார்கள். ஒரு வீட்டின் மத்திய பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கு வாழ்பவருடன் எல்லாரும் சண்டை போடுவார்கள். மனதில் மகிழ்ச்சியே இருக்காது.
பரிகாரங்கள்
சகோதரர்களுக்கிடையே நல்லுறவு இருப்பதற்கு... தினமும் ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, அவரை நான்குமுறை சுற்றி வந்து தீபமேற்றி வழிபடவேண்டும்.
அங்குள்ள செந்தூரத்தை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று இனிப்பைப் பிரசாதமாக வைத்து, அதை ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
நாய்க்கு இனிப்பு, பிஸ்கட், ரொட்டி ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடுதல் அவசியம்.
கறுப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.
தன் 2-ஆவது பாவத்திலிருக்கும் பாவகிரகத்தின் பொருட்களை தானமளிக்கவேண்டும்.
வீட்டில் வடக்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.