திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில், மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 14 நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளான விநாயகர் சதுர்த்தி அன்று 60 கிலோ கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு நாளும் மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் லட்சுமி கணபதி, பஞ்சமுக கணபதி, மூல கணபதி ஆகியவற்றுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பதிமூன்றாம் நாளான நேற்று (22.09.2021) 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவர் விநாயகருக்கு விபூதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சை பழம், சாத்துக்குடி, கரும்புச்சாறு, திராட்சை உள்ளிட்ட 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 14ஆம் நாளான இன்று, மூலவர் உற்சவர் கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும் லட்சார்ச்சனையும் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.