தமிழர்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கோடை வெயிலின் வெக்கையை சமாளிக்க திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதே போல விதை நேர்த்தி செய்ய முளைப்பாரித் திருவிழாக்கள், காடுகள், வனங்களை பாதுகாக்க வன கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அத்தனை விழாக்களும் அர்த்தமுள்ள விழாக்களாக தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இப்படி ஒரு திருவிழா தான் தமிழக மக்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் பல நாட்கள் நடக்கும். தீ மிதி, பால்குடம், காவடி என ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா ஊர்வலத்திற்கு முன்பு ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கானோர் தீ பந்தங்கள் தூக்கிச் செல்ல பெண்களின் கும்மியாட்டத்தோடு வீதி உலா நடக்கும். ஒவ்வொரு நிகழ்வுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.பொங்கல் நாளில் சுமார் 100 கிராம மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து படையலிட்டு உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து படைப்பார்கள். திருவிழாவின் கடைசி நாளில் தான் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்மனை வணங்கி ‘நாடு செலுத்தி’ செல்லும் நிகழ்வு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் திருவிழாவாக அமையும்.
பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செய்பூதி நாடு என 4 நாடுகளுக்கு கீழ் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு. இந்த திருவிழாவில் ஜாதி பாகுபாடு பறந்துவிடும். ஒவ்வொரு நாட்டில் இருந்து கிராம மக்கள் திரளாக ஊர்வலமாக வந்து அம்மனை வணங்கிச் செல்வர். சிலர் குதிரையில் ஏறிவந்து செல்வர். அதே திருவிழாவில் ஆலவயல்நாடு ‘நாடு செலுத்தும்’ நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசமானதாக உள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்றும் பக்தர்கள் ஒரு நாள் பழந்தமிழனாகவே மாறிவிடுகிறார்கள். பலரும் கடவுளிடன் தங்கள் வேண்டுதலை முன்வைத்து நினைத்த காரியம் முடிந்தால் இதை செய்கிறேன் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் இங்கு நான் சேற்றில் குளித்து வந்து தரிசனம் செய்கிறேன் என்று நேர்த்திக்கடன் வைத்திருப்பார்கள்.
நாடு செலுத்தும் முதல் நாளில் ஒரு கண்மாயில் தண்ணீர் விட்டு நன்றாக சேற்றை குழப்பி வைத்துவிடுகிறார்கள். நாடு செலுத்தும் நாளில் நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள், சிறுவர்கள் நன்றாக குழப்பிய சேற்றில் குளித்து உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு தலையில் பறவைகளிக் இறகுகள், உடலில் பஞ்சுகள் ஒட்டிக் கொண்டு கைகளில் வேல் கம்புகளுடன் சிலம்பமாடி வருவதை காணவே பல ஆயிரம் மக்கள் திரண்டு நிற்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் ஆலவயல் நாட்டார் பதாகையுடன் செல்ல பின்னால் செல்லும் அனைவரும் சிலம்பத்துடன் செல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட முகூர்த்தக்கால்கள், வேல்கம்புளும், கும்மியும் காணப்படுகிறது. கோயிலலைச் சுற்றி வந்து உள்ளே சென்று வணங்கி செல்கின்றனர்.
இது குறித்து, அங்குள்ள இளைஞர்கள் கூறும் போது, “திருவிழாக்கள் நம் முன்னோர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் எந்த ஜாதி பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து ஜாதியினரும் கலந்து கொள்வதுடன் தங்கள் உறவினர்களையும் அழைத்து வருவார்கள். அப்படித்தான் நாடு செலுத்துதல் விழாவும். நேர்த்திக்கடன் செலுத்த சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டு போவார்கள். பார்க்க பழங்குடிகளாகவே தெரியும். சேற்றில் குளித்தால் உடலில் தோல் நோய்கள் பறந்து போகும். அதனால் தான் நம்முன்னோர்கள் கோடையில் வரும் தோல் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சேற்றுக் குளியல் திருவிழாவில் கலந்து கொண்டனர். சுமார் 5 மணி நேரம் வரை அந்த சேரு நம் உடலில் இருப்பதால் நம் உடம்பில் உள்ள தோல் நோய்கள் பறந்து போகிறது. அந்த மருத்துவத்தை திருவிழாவாக செய்வதால் ஏராளமானோர் வந்து கலந்து கொள்கிறார்கள். இன்றும் பல மேலை நாடுகளில் இந்த சேற்றுக் குளியலை பணத்திற்காக மருத்துவமனைகளில் செய்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் பணமும் வசூல் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் திருவிழாவாக செய்கிறோம்” என்றனர்.