வில்லனாக பல படங்களில் தன்னுடைய நடிப்பால் மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி, தன்னுடைய ஆன்மீகத் தேடலால் தற்போது ஒரு கோவில் கட்டியுள்ளார். ஆவடியில் அவர் கட்டியுள்ள ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குறித்து அவரே நம்மிடம் பேசுகிறார்...
கோவில் கட்டுவதற்கு முன்பு கோவில்கள் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். முறைப்படி ஆராய்ச்சிகள் செய்த பிறகு கட்டப்பட்டது தான் இந்தக் கோவில். கோவில்களில் சவுண்டு எனர்ஜி மிக முக்கியமானது. அது இந்தக் கோவிலில் உண்டு. எனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் இறைவனிடம் வேண்டுதல்கள் இல்லை. சிறுவயதிலிருந்தே எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கடவுளிடம் நான் கேட்டதில்லை. எப்போதும் கடவுள் என் அருகில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் அதிகபட்ச வேண்டுதலாக இருந்திருக்கிறது.
கடவுளுக்கு என்னுடைய நன்றிக்கடன் தான் இந்தக் கோவில். எனக்கு இதுவரை கிடைத்த உயரங்கள் எதுவும் நான் எதிர்பார்த்தவை அல்ல. நான் எது செய்தாலும் அந்தப் பணியின் மீது மட்டும் தான் என்னுடைய கவனம் இருக்கும். பெயர் வாங்க வேண்டும் என்பதில் கவனம் இருக்காது. ஆனால் நல்ல பெயர் கிடைத்துவிடும். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டித்தந்த வீடு தான் இந்தக் கோவில். பொதுவாகவே எனக்கு இருக்கும் ரசனை தான் இந்தக் கோவிலின் புற வடிவமைப்பிலும் நான் ஈடுபட்டதற்கான காரணம்.
மனதார நாம் நம்பும் விஷயங்கள் நிச்சயம் நடக்கும். அனைத்தையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வேண்டுதலுக்கென்று தனியாக எந்த முறையும் இல்லை. உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். எதிலும் நம்பிக்கை மிகவும் அவசியம். அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் தவறில்லை. கோவிலுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.
நாம் கோவிலுக்குச் செல்லும்போது மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் சற்று நேரம் அங்கு அமைதியாக இருந்துவிட்டு வந்தாலே பல நன்மைகள் நடக்கும். கோவிலுக்கு நிம்மதியுடன் வந்து நிம்மதியாகச் செல்லுங்கள். மனம் அமைதியடையும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.