உலகின் முதல் விர்ட்சுவல் ரியாலிட்டி ஜிம் சான் ஃபிரான்சிஸ்கோவில் திறக்கப்பட்டுள்ளது. சாதாரண ஜிம்களில் வியர்க்க விறுவிறுக்க பளு தூக்கி உடல் எடையை குறைபவர்கள் இந்த ஜிம்மில் ஒரு முறை ஒர்க்கவுட் செய்தால் மீண்டும் சாதாரண ஜிம்முக்கு போக மாட்டார்கள் என சவால் விடுகிறது பிளாக் பாக்ஸ் விஆர் நிறுவனம்.
இந்த வகை ஜிம்களை தொடங்க கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ஆராய்ச்சிகளை தொடங்கியது இந்த நிறுவனம். 3 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு தனது முதல் ஜிம்மை திறந்துள்ளது. இந்த ஜிம்மில் நாம் சென்றதும் உடற்பயிற்சி செய்வதற்கான வி ஆர் ஹெட்செட் மற்றும் சில கருவிகள் அளிக்கப்படும். பிறகு 10க்கு 10 என்ற முறையில் குறிப்பிட்ட பாய்ண்ட் அளிக்கப்படும். அதன்பின் உங்கள் இடத்தில் நின்று கொண்டு வி.ஆர் திரையை அணிந்துகொள்ள வேண்டும்.
அதில் உங்களுக்கும் சண்டையிடுவதற்கான எதிராளியை தேர்ந்தெடுக்க சொல்லும். அதில் ஏதேனும் ஒரு கார்டூன் கதாபாத்திரத்தையோ அல்லது உங்களுடன் ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வேறு ஒருவரையோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அவருடனான சண்டையை நீங்கள் தொடங்க வேண்டும். ஒரு செட் புள்ளிகள் முடியும் வரை சண்டையிட்ட பின்பு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். பிறகு மீண்டு புள்ளிகள் அளிக்கப்பட்டு சண்டை ஆரம்பிக்கலாம்.
சூப்பர் ஹீரோ படங்களில் வரும் கிராபிக்ஸ் சண்டை காட்சிகள் போல பல வித்தியாசமான இடங்கள், சூழல்களில் நாம் சண்டையிடலாம். இந்த புது விதமான யோசனையே இந்த ஜிம்மின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு சண்டையிடும் போது உடலில் அனைத்து பாகங்களும் இயங்குவதால் சாதாரண ஜிம்மில் பளு தூக்கி உடல் எடையை குறைப்பதை விட இதில் எளிமையாக குறைக்க முடிவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சண்டைகளை தவிர வேறு சில விளையாட்டுகளையும் இதில் தேர்ந்தெடுத்து விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹீரோக்கள் படத்தில் மட்டுமே பறப்பது, தாவுவது என பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு தாங்களும் இது போல செய்ய முடியும், அதோடு உடல் எடையும் குறையும் என்பதால் இந்த ஜிம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.