உலகின் முதல் சோலார் நெடுஞ்சாலை அல்லது போட்டோ வோல்டாயிக் சாலை கிழக்கு சீனாவின் ஜினான் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்டு, சோதனைக்காக விடப்பட்டது. இந்த சாலை நிறுவப்பட்டு 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோலார் சாலை 1,120 மீட்டர் நீளமுள்ளது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த சாலையின் கீழ் அடுக்கில் இன்சுலேட்டர்களும், நடுவில் போட்டோ வோல்டாயிக் செல்களும், மேல் அடுக்குள் ஒளிபுகக்கூடிய கான்கிரீட்டும் பூசப்பட்டுள்ளன. அந்தப் பகுதியின் மிக முக்கியமான சாலை இது என்பதால், நாளொன்றுக்கு 40ஆயிரம் வாகனங்கள் இதைக் கடந்து செல்கின்றன. மேலும், வயர்லெஸ் முறையில் இது மின் கடத்தும் என்பதால், இதைக் கடந்து செல்லும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சார்ஜ் தானாகவே ஏறிக்கொள்ளும். அதுமட்டுமின்றி, இதன் மூலம் உருவாகும் மின்சாரம் சுங்கச் சாவடிகள், மின் விளக்குகள், பெயர்ப்பலகைகள் என பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இது நிறுவப்பட்டுள்ள இந்த நூறு நாட்களில், எந்தவித பாதிப்பும் இன்றி 87 ஆயிரத்து 920 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது இந்த சாலையின் மீது பயணம் செய்ய பொதுமக்கள் காட்டும் ஆர்வத்தையே குறிக்கிறது என்கிறது அரசு. இருந்தாலும், பொதுமக்களிடம் கூடுதலாக கருத்து கேட்டபின், பிற இடங்களிலும் இதை நிறுவ முயற்சிக்கப்படும் என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் சோலார் நெடுஞ்சாலை என சீன ஊடகம் இதைப் பெருமைப்படுத்தினாலும், பிரான்சு நாட்டில் 2016ஆம் ஆண்டு இறுதியில் இது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.