2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வாட்ஸ் ஆப் நிறுவனம், குரூப் வீடியோ கால் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது. அதன்பின் புதிய குரூப்பில் இணைவதற்கும் அதில் அட்மின் ஆகுவதற்கும் புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருந்தது.
அதன்பின் சமீபத்தில் வாட்ஸ்அப் குரூப்களில் அனுப்படும் மெசெஜ்களில் குறிப்பட்ட நபரின் மெசேஜை விரைவில் தேடும் வகையில் ‘அட்வான்ஸ் சர்ஜ்’ என்ற தேடல் அப்டேட் ஒன்றை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் போலி செய்திகளை கூகுளின் உதவியுடன் தேடும் வசதியை கொண்டுவரும் வகையில் சோதனை நடைபெற்றுவருகிறது.
இதற்கு முன்னதாக போலி செய்திகளை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வதில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுபாடைக் கொண்டுவந்தது.
எனினும் அப்போதும் போலி செய்திகளை கட்டுபடுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் போலி செய்திகளை தடுக்க புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது சோதனை தளமான பீட்டா வெர்ஷனில் கொண்டு வந்துள்ளது. அதன்படி பார்வேர்டு செய்யப்படும் புகைப்படத்தை செர்ச் இமேஜ் (Search Image) எனும் ஆப்ஷன் மூலம் நேரடியாக கூகுளில் சென்று அதன் உண்மைத் தன்மையை ஆராயலாம். இந்த முறையால் போலி செய்திகள் ஓரளவுக்கு குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்ஷன் தற்போது பீட்டா 2.19.73 என்ற பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை தற்போது சோதனை முயற்சியில் இருப்பதால் விரைவில் அனைத்து தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.