வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களைப் பாதுகாக்கும் என தெரிவித்ததோடு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படாது எனவும், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியது.
இந்தநிலையில், தள்ளி வைக்கப்பட்ட மாற்றங்களை அமல்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்அப், தற்போது இறங்கியுள்ளது. மே 15 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யப்பட்ட சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு பயனாளர்களுக்கு வாட்ஸ்அப், இன்-அப் நோட்டிஃபிகேஷன்களை அனுப்பி வருகிறது.
அதேசமயம் வாட்ஸ்அப், மே 15ஆம் தேதிக்குள் பயனர்கள் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவிட்டாலும், அவர்கள் கால் மற்றும் நோட்டிஃபிகேஷனைப் பெற முடியும். ஆனால் செய்திகளை அனுப்பவோ, பெறவோ இயலாது. தொடர்ந்து 120 நாட்களுக்கு அவ்வாறு வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அந்தக் கணக்கு தானாகவே டெலிட் ஆகிவிடும். அவ்வாறு டெலிட் ஆனவற்றைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தனியுரிமை கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.