பல்வேறு இந்திய வங்கிகளிடம் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா 9000 கோடிக்கு வாங்கிவிட்டு அதை திருப்பி கட்டமால், லண்டனில் தஞ்சமடைந்தார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்திய தரப்பு சார்பில், விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில்தான் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தது.
பிறகு, மல்லையா தரப்பு, மும்பை சிறையில் வெளிச்சம் இருக்காது என்று பல சாக்குகளை சொல்லியது. அதற்காக மும்பை சிறையின் வீடியோ காட்சிகள் வேண்டும் என்று லண்டன் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், சிபிஐ சார்பில் மும்பை சிறையின் வீடியோ காட்சி லண்டன் நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூடிய விரைவில், விஜய் மல்லையா நாடுகடத்தப்பட்டு மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக பலர் தெரிவிக்கின்ற நிலையில் சிபிஐயால் ஒப்படைக்கப்பட்டுள்ள 10 நிமிட வீடியோவின் அடிப்படையில் பார்க்கும் பொழுது டி.வி. பெட்டி, மேற்கத்திய கழிவறை, மெத்தை, தலையணை, பீங்கான் சாப்பாட்டு தட்டு, 2 கிண்ணங்கள் தரப்படும். சிறை அறைக்குள் சூரிய ஒளி படுகிற வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, நூலக வசதி என மொத்தத்தில் அவருக்கு சிறையில் அதிநவீன வசதிகள் கிடைக்க உள்ளன என்றே கூறப்படுகிறது. அதேபோல் சிறை கட்டிடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.