பிரபல கூடைப்பந்து வீரரான கோப் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் விமான விபத்தில் இறப்பார் என எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவர் செய்த ட்வீட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கூடைப்பந்து போட்டியில் உலக அளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியின் முன்னாள் வீரர் கோப் பிரையன்ட். சர்வதேச அளவில் கூடைப்பந்தாட்டத்தின் ஜாம்பாவானாக வலம் வந்த இவர், தொடர் காயங்கள் காரணமாக 2016ஆம் ஆண்டு சர்வதேச கூடைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணி செய்து வந்த கோப் பிரையன்ட், தனது 13 வயது மகள் ஜியானாவுடன், கலிபோர்னியாவிலுள்ள ஒரு கல்லூரி அணிக்கு பயிற்சியளிப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கலபாசஸ் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் அவரும், அவரது மகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோப் ப்ரையன்டின் மரணம் குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நபர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு நேற்று முதல் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் நோஸோ என்ற அந்த நபர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பதிவிட்டுள்ள ஒரு பதிவில், “ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் கோபி இறக்கப்போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று அந்த பதிவின் பின்னூட்டத்தில் அந்த நபர் மன்னிப்பும் கோரியுள்ளார். இந்த பதிவு நேற்று முதல் வைரலாகி வருகிறது.