உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் கரோனாவுக்கு ஒரே நாளில் 255 பேர் இறந்தனர். மேலும் ஒரே நாளில் புதிதாக 18,276 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 1,41,854 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு இரண்டு வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும். அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு ஏப்ரல் 12- ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும். அமெரிக்காவில் கரோனா பலியை இரண்டு லட்சத்துக்குள் கட்டுப்படுத்தினாலேயே பெரிய விஷயம். அமெரிக்காவில் சமூக விலகலுக்கான நடைமுறைகளை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது" என்றார்.