கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், இதுகுறித்த அமெரிக்க அதிபரின் ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையாகியுள்ளது.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளது.
சீனாவை கடந்து ஈரான், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் உணரப்பட்டு வருகிறது. அதேபோல அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், "சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவு அளிக்கும்'' என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே இந்த வைரஸுக்குக் காரணம் சீனாதான் என அமெரிக்க அதிகாரிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் கூறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.