பைத்தியக்காரர் போல பேசுகிறார் ட்ரம்ப் – கிம் ஜோங் உன் கிண்டல்!
ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கவே தகுதியற்றவர் ட்ரம். மனநிலை பிறழ்ந்தவர் போல பேசுகிறார். ரவுடியைப் போலவும், கூலிப்படைத் தலைவனைப் போலவும் பிதற்றுகிறார். அவருடைய பேச்சுக்கு தகுந்த விலை கொடுக்க நேரும் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இதுவரை வெளிப்படையாக பேசியதில்லை. அந்த நாட்டின் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே அவரை விமர்சனம் செய்தார்கள். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அந்த நாட்டை மிரட்டுவதையே குறியாக வைத்து செயல்படுகிறார்.
வடகொரியாவை மிரட்டுவதும், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதும், ஐ.நா.மூலம் தடைவிதிக்க வற்புறுத்துவதும் ட்ரம்பின் முக்கிய வேலையாக மாறிவிட்டது. ஆனால், வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதாக இல்லை. ட்ரம்ப் மற்றும் ஐ.நா. பொருளாதார தடைகளைப் பற்றி கவலைப்படவும் இல்லை.
ஹைட்ரஜன் குண்டு, அமெரிக்காவையும் ஜப்பானையும் குறிவைத்து தாக்கும் நீண்டதூர அணு ஏவுகணைகள் சோதனை, ஆசியா முழுமையும் தாக்கும் வகையிலான ஏவுகணை சோதனை என்று வடகொரியா சரமாரியாக அணு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக சோதனை நடத்திவருகிறது.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய ட்ரம்ப், எங்கள் கூட்டாளிகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை வடகொரியா மிரட்டுகிறது. அந்த நாடுகளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் வடகொரியாவை முற்றாக அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தார்.
அவருக்கு புதன்கிழமை பதில் அளித்த வடகொரியா பிரதிநிதி, ட்ரம்ப் நாய் போல குரைப்பதாக கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து முதன்முறையாக கிம் ஜோங் உன் உலகிற்கு வெளிப்படையாக பேசினார்.
ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு கொஞ்சமும் பொருத்தமற்றவர் ட்ரம்ப். அவர் மனநிலை பிறழ்ந்தவர் போல பேசுகிறார். அவருடைய பேச்சுக்கு தகுந்த விலை கொடுக்க நேரும். ஒரு ரவுடியைப் போலவும் கூலிப்படைத் தலைவனைப் போலவும் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ட்ரம்ப் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று கடுமையான வார்த்தைகளை கிம் ஜோங் உன் பயன்படுத்தியிருக்கிறார்.
அவருடைய பேச்சு அமெரிக்காவுக்கும் அதன் அதிபருக்கும் எதிரான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. இதுவரை எந்த விமர்சனத்துக்கும் பதிலளிக்காத கிம் ஜோங் உன், வடகொரியாவை முற்றாக அழிப்போம் என்ற ட்ரம்பின் மிரட்டலுக்கே முதன்முறையாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆதனூர் சோழன்