இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் கூட்டணி அமைக்கும் பணிகளில் இலங்கை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியான பொதுஜன முன்னணி கட்சியின் ஆலோசனை கூட்டம் கொழும்புவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேர்தலில் யாரை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனை கூட்ட முடிவில் பொதுஜன முன்னணி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே அறிவிக்கப்பட்டார். அதேபோல் பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்பதால், ராஜபக்சே தனது சகோதரை அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் நிற்பதற்காக கோத்தபய ராஜபக்சே தனது அமெரிக்கா குடியுரிமையை துறந்தார். இலங்கையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இவர் இருந்தபோது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், இலங்கை சிங்களர்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு காணப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.