இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் காரணமாகவே தற்போதைய கரோனா அலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பைசர் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள், ஒமிக்ரான் கரோனாவுக்கு எதிரான பிரத்தியேக தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரித்து வரும் ஹமலேயா ஆராய்ச்சி மையம், ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 75 சதவீத செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள், ஆறு மாதங்களில் ஸ்புட்னிக் லைட்டை பூஸ்டராக செலுத்திக்கொண்டால், ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு 100 சதவீதம் அதிகரிப்பதாகவும், ஒருவேளை ஸ்புட்னிக் லைட்டை செலுத்திக்கொள்ளவில்லையெனில் ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு 56-57 சதவீதமாக குறைந்துவிடுவதாகவும் ஹமலேயா ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு ஏப்ரல் மாதமே ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டும், அது இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.