இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், உலக நாடுகள், இந்தத் தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து விமானம் வருவதை எதிர்த்து ரஷ்ய விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (29-10-23) ரஷ்யாவுக்கு ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் ரஷ்யாவின் தாகெஸ்தானின் மகச்சலா விமான நிலையத்தை அடைந்ததும் அதில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினர். அப்போது அந்த விமான நிலையத்தில் இருந்த சில பேர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் விமான நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இஸ்ரேலிய மக்களை தெரிந்துகொள்வதற்காக விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் கடவுச்சீட்டை பரிசோதித்துள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதற்கிடையே, பொதுமக்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் உள்படப் பல வாகனங்களையும், விமான நிலையத்தையும் அடித்து நொறுக்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கலவரத்தில் போலீஸார் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி வருகிற நவம்பர் 6 ஆம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.