வடகொரியாவில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கட்சி மற்றும் மாநிலப் பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும்போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இது வடகொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை நமது நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே உள்ளது.
பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும்” என்று பேசினார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, கிம்ஜாங் உன் திடீரென்று கண் கலங்கினார். இதையடுத்து, அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
வடகொரிய அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ரஷ்ய நாட்டு பெண்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். மாஸ்க்வோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவின் மக்கள் தொகையை பாதுகாப்பதும், அதிகரிப்பதும் தான் நம் இலக்கு. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ரஷ்யாவின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது. ரஷ்யாவில் தற்போது 5 அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான நமது மரபை பாதுகாத்து வருகின்றன.
முந்தைய காலத்தில் நமது மூதாதையர்கள் 8 அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதை ரஷ்ய குடும்பங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சிறந்த மரபுகளை நாம் பாதுகாத்து புத்துயிர் கொடுப்போம். அதன்படி, நாட்டில் உள்ள பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டின் 1000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும்” என்று கூறினார்.