ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. நேட்டோ நாடுகளை நம்பி போர் சூழலை எதிர்கொண்ட உக்ரைன் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது. நேட்டோ படைகள் இதுவரை உக்ரைன் நாட்டிற்குள் நுழையாதது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக்கப் பார்ப்போம்.
நேட்டோவில் இணைய வேண்டும் என்ற உக்ரைனின் விருப்பம் தான் தற்போது நடந்து வரும் போருக்கு மூல காரணம். உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று நினைக்கும் ரஷ்யா, உக்ரைனை நேட்டோவில் இணைக்க மாட்டோம் என்று உறுதியளிக்க நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், அந்த உறுதியை அளிக்கவில்லை. எனவே, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இது அவசியம் என்று கூறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
ஆனால், நேட்டோ படைகளால் உக்ரைனுக்கு எந்த உதவியையும் வழங்க முடியவில்லை. இதற்கு காரணம் நேட்டோவில் உள்ள சட்டப்பிரிவு 5. நேட்டோ அமைப்பின் முக்கிய நோக்கமே, இந்த சட்டப்பிரிவு 5 மூலமே நிறைவேறுகிறது. கடந்த 1949- ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதே நேட்டோ என்றழைக்கப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தக் கூட்டமைப்பு.
இதில் மிக முக்கியமானது சட்டப்பிரிவு 5. உறுப்பு நாடுகள் ஏதேனும் ஒன்றுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ (அல்லது) தாக்கப்பட்டாலோ, மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் மீதான தாக்குதல் என்று கருதிப் படைகளை அனுப்ப வேண்டும். ஆனால், இது உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
உக்ரைனைப் பொறுத்தவரை நேட்டோவுடன் நட்பு நாடு தானே தவிர, உறுப்பினர் நாடு அல்ல. எனவே, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ, தனது சட்டப்பிரிவு 5-ஐ மீறி படைகளை அனுப்ப முடியாது. ஆனால் உக்ரைன் நாடு போலந்து, ஹங்கேரி, சுலோவாகியா, ருமேனியா ஆகிய நேட்டோ நாடுகளுடன் எல்லையைப் பகிர்கிறது. ஒரு வேளை இந்த நாடுகள் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தினால், உடனடியாக நேட்டோ படைகள் பதிலடிக் கொடுக்கும்.
எனவே தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேட்டோ நாடுகள் இணைந்து 40,000 படைகளை ஐரோப்பாவில் தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். ஆனால், ரஷ்யா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது.