
தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.