Skip to main content

வங்கதேசத்திலும் ரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் பிரான்சிஸ்!

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
வங்கதேசத்திலும் ரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் பிரான்சிஸ்!

மியான்மர் பயணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்திற்கு வருகைத் தந்துள்ள போப் ஆண்டவர், ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச அளவில தீர்மானகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மியான்மரில் நீடிக்கும் வன்முறைகள் காரணமாக ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் வஙகதேசத்தில் தஞ்சமடைந்துள்ள சூழலில், போப் ஆண்டவரின் மூன்று நாள் பயணம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில், வங்கதேசத்தின் மனிதாபிமான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள போப், ‘ரோஹிங்கியா’ என்ற சொல் பதத்தைப் பயன்படுத்தாமல் ரக்ஹைன் மாநிலத்து அகதிகள் என்று பயன்படுத்தியிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 



இந்த சொல் பதம் புத்த பெரும்பான்மையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால் கத்தோலிக்க பிரதிநிதிகள் அதனைத் தவிர்க்க அறிவுறுத்தி இருந்தனர். அதனடிப்படையில், மியான்மரின் ஆங் சான் சூச்சியுடன் மேடையில் தோன்றிய போப், அங்கு ரோகிங்யாக்கள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. இந்நிலையில், வங்கதேசத்திலும் ‘ரோஹிங்கியா’ என்ற சொல் பதத்தை போப் தவிர்த்துள்ளார்.  

ரோஹிங்கியா மக்களை இனக்குழுவாக அங்கீகரிக்க மறுக்கும் மியான்மர் அரசு, அவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய பெங்காலிகள் என்கின்றது. 

160 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வங்கதேசத்தில்  0.5 சதவீதம் பேர்  கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்தவர்கள். போப் ஆண்டவர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) டாக்காவில் நடைபெறும் இறைக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளக்கூடும் என சொல்லப்படுகின்றது. அத்துடன் நாளை அவர் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளையும் சந்திக்க இருக்கிறார். முஸ்லீம் மதத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட வங்கதேசத்தில் கிறிஸ்த்துவர்கள் மீது நிகழும் தாக்குதலைப் பற்றியும் போப் ஆண்டவர் கவலைக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்