பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
மனிதர்கள் உடலில் விலங்குகள் உறுப்பைப் பொருத்தி இயங்கவைக்க முடியுமா என்பது தொடர்பாக, நீண்டகாலமாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனையில், பன்றியின் சிறுநீரகம் ஒன்றை வெற்றிகரமாக மனிதனுக்கு பொருத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு சாதனை படைத்தது. மூளை சாவு அடைந்த ஒருவருக்கு, சோதனை முறையில் மூன்று நாட்கள் பொருத்தப்பட்டிருந்த இந்தச் சீறுநீரகத்தின் செயல்பாடு, இயல்பானதாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தபட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது மருத்துவதுறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்பட்டது. இருந்தாலும் மூளைச்சாவு அடைந்தவருக்கே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்றியின் சிறுநீகத்தைப் பொருத்திக் கொண்ட நபர் தற்பொழுது உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் மஸசுஸெட்ஸ் மாநிலம் வேம்ப்வுட் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்ட். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட அவருக்கு மஸசுஸெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி அவருக்கு உலகிலேயே முதன் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது மருத்துவ உலகிற்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரிச்சர்ட் திடீரென உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மரணத்திற்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை அதுவும் குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை வைத்ததுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மைல் கல் சாதனையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.