இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்துவரும் நிலையில், இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 84 ரூபாயும், டீசல் ஒரு லிட்டருக்கு 113 ரூபாயும் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.289க்கும் விற்பனையாகிறது. இந்தக் கிடுகிடு விலை உயர்வால் இலங்கை மக்களுக்கு இன்றைய பொழுது அதிர்ச்சியுடனே விடிந்துள்ளது.