
இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது வாரமாக தொடரும் தன்னெழுச்சிப் போராட்டத்தில் மக்கள் திரளாகக் கலந்துகொண்டு ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர். கொழும்பு-காலிமுகத்திடலில் குவிந்துள்ள மக்கள் கடந்த 9ஆம் தேதி முதல் இன்று வரை இந்த போராட்டத்தை தன்னெழுச்சியாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் பங்குபெற்ற ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இது எந்த கட்சிக்கும் சாராதது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த அரசோடோ, அரசு சார்ந்த நபரோடோ எந்தவித பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போகப்போவதும் இல்லை. எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதும் இல்லை'' என்றார்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள இன்னொரு இளைஞர் பேசுகையில், ''மக்கள் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்ல. பிள்ளைகள் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்ல. மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். பிச்சைபோட காசுமில்ல... இந்த ஜனாதிபதி இந்த நாட்டைவிட்டு போகணும். போனாதான் மக்களுக்கு நிம்மதி'' என்றார்.