துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இன்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கமும் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,500 பேர் பலியான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கப் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதைவிட அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி, சிரியாவில் மட்டும் நிலநடுக்க பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 30,000 தாண்டும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால மீட்பு அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் துருக்கி, சிரியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் வீடுகள் இடிந்துவிட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு இல்லாமல் கடும் குளிரில் வாடி வருகின்றனர்.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் மீட்பு பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. உறைய வைக்கும் கடும் குளிரில் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிருடன் இருப்பவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உயிரிழப்பு எட்டு மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கியின் பத்து மாகாணங்களில் மூன்று மாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் என துருக்கியின் அதிபர் தெரிவித்துள்ளார்.