Skip to main content

நீரவ்மோடி வழக்கறிஞர் லண்டனில் பரபரப்பு வாதம்..! இந்தியா அதிர்ச்சி..!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Neerav Modi's lawyer sensational argument in London

 

மும்பையைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றார். அதனைக் கட்டத் தவறியதால் அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இவர் மீது தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லண்டனுக்குத் தப்பிச் சென்றார் நீரவ் மோடி. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவரும் நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார் நீரவ் மோடி.

 

அவரை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக, லண்டன் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது இந்திய அரசு. இதனையடுத்து ஒரு கட்டத்தில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த,  பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது பிரிட்டன் அரசு.

 

அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீரவ் மோடி. அது தள்ளுபடியான நிலையில் மீண்டும் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று (21.07.2021) லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீரவ் மோடி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், “நீரவ் மோடி தற்போது மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். தன்னுடைய நிலையை உணராதவராகவும் இருக்கிறார். அதனால் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மனநீதியாக பெரிய பாதிப்புகள் அவருக்கு ஏற்படலாம். அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு நாடு கடத்துவதிலிருந்து அவருக்கு விலக்கு வேண்டும்’’ என்று வாதிட்டுள்ளார்.

 

நீரவ் மோடி வழக்கறிஞரின் இத்தகைய வாதத்தை ஏற்க மறுத்து இந்திய அரசின் சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் என சொல்லப்பட்ட வாதத்தில் அதிர்ச்சியடைந்துள்ளது இந்திய அரசு.

 

 

சார்ந்த செய்திகள்