இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
வளரும் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட அந்த வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டில் இருந்து வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் வளரும் நாடுகள் அதிக லாபம் பெற முடியும். அமெரிக்காவின் இந்த சலுகையை இந்தியாவும் அனுபவித்து வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் பொருட்களை எளிதாக, இந்திய சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து இந்தியா எந்த வித உத்திரவாதமும் தராததால் அதற்கு எதிர் நடவடிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திட்டத்தால் அதிகம் பயன்பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த நிலையில், தற்போது சலுகை ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான கோடிகளில் இந்தியா வரிக்காக செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கபடுகிறது.