Skip to main content

அண்ணண் பிரதமர்! தம்பி ஜனாதிபதி! மகன் அமைச்சர்! இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
  Sri Lanka

 

 

இலங்கையில் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் பிரதமராகியிருக்கிறார் மகிந்த ராஜபக்சே! இவரது இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்சே ஏற்கனவே இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கிறார். 

 

பிரதமரானதை அடுத்து தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும் என கடந்த 3 நாட்களாக, அலறி மாளிகையில் தனது சகோதரர் கோத்தபாயவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் மகிந்தராஜபக்சே. நேற்று அமைச்சரவை பட்டியலுக்கு இறுதி வடிவம் தரப்பட்ட நிலையில். புதிய அமைச்சரவை இன்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டது.

 

அதன்படி, மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சியில் புதிய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சேவும், நிதி- புத்தசாசனம்- மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மேலும், மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தொழில் துறை, ஜீ.எல்.பீரிஸ்சுக்கு கல்வி துறை, பவித்ராதேவி வன்னிஆராச்சி - சுகாதார துறை, தினேஷ் குணவர்தன - வெளிநாட்டு அலுவல்கள், டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில்துறை, காமினி லொக்குகே - போக்குவரத்து துறை, பந்துல குணவர்தன - வர்த்தகத்துறை , சீ.பி.ரத்நாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு துறை, ஜனக பண்டார தென்னகோன் - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி துறை, கெஹேலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடகத்துறை, சமல் ராஜபக்சே - நீர்பாசன துறை , டலஸ் அழகப்பெரும - மின்சக்தித் துறை , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள் துறை, விமல் வீரவன்ச - கைத்தொழில் துறை , மஹிந்த அமரவீர - சுற்றுலாடல் துறை, எஸ்.எம்.சந்திரசேன - காணி , மஹிந்தானந்த அலுத்கமகே - கமத்தொழில் துறை அமைச்சர், தேவ நாணயக்கார - நீர் வளங்கள் துறை , உதய பிரபாத் கம்மன்பில - வலுசக்தி துறை  ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ரமேஷ் பத்திரன - பெருந்தோட்டத் துறை, பிரசன்ன ரணதுங்க - சுற்றுலா துறை , ரோஹித அபேகுணவர்தன - துறைமுககங்கள் மற்றும் கப்பல் துறை, நாமல் ராஜபக்சே - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அலி சப்ரி – நீதித்துறை அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இதனையடுத்து இராஜாங்க அமைச்சர்களாகவும் பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே! அப்பாவின் (மகிந்த ராஜபக்சே) ஆட்சியில் நான் அமைச்சராக மாட்டேன் என சொல்லி வந்த நாமல் ராஜபக்சே அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்