விலங்கியல் பூங்காவில் சரியான உணவு மற்றும் பராமரிப்பு இன்றி உடல் நலிந்து நடக்கவே முடியாமல் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகரில் உள்ள கார்டூமில் அல்-குரேஷி விலங்கியல் பூங்காவில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வறுமை மிகுந்த நாடான சூடானில் இங்குள்ள விலங்குகளை பராமரிக்க அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்படாத சூழலில், தனியார் நிதியின் மூலமே விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உணவு மற்றும் மருந்துகள் வாங்க பணமில்லாமல் பூங்கா நிர்வாகம் தவித்துள்ளது.
இதனால் உணவு அளிக்க முடியாத காரணத்தால் அங்குள்ள விலங்குகள் பட்டினி கிடைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படி பட்டினி கிடந்தது உடல் மெலிந்த சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உடல் நலிந்த நிலையில் காணப்பட்ட ஐந்து சிங்கங்களில் ஒரு சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாகவும், மற்ற நான்கு சிங்கங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.