அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது
இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.
இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார்.