ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே சரிந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க நபரை உடனடியாக ஷின்சோ அபேவின் பாதுகாப்பு அதிகாரிகள் துரத்தி பிடித்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். துப்பாக்கிச் சூட்டால் கீழே விழுந்த ஷின்சோ அபேவை மீட்கப்படும்போதே அவரிடம் இருந்த எந்த அசைவுகளும் இல்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அவருக்கு மார் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.