Skip to main content

விமான தீ விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
japan tokyo flight incident

புத்தாண்டு தினத்தில் (01-01-2024) ஜப்பானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி காரணமாக இன்று (02-01-24) காலை வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதே சமயம் ஒரே நாளில் மட்டும் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இது அந்த நாடு முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. 

இந்த சூழலில் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) ரன்வேயில் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விமான தீ விபத்தில் கடலோர காவல்படையின் விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தின் கேப்டன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டு தினத்தில் நாட்டையே உலுக்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்